545.

    வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
        வேலாயுதத் தோரே வாரும்
        காலாயுதத் தோரே வாரும்.

உரை:

     வீணை முரன்றது - வீணை இசைத்தது. விடியற்காலையில் வேதியர் வேதம் ஓதுவது தொன்று தொட்டு வரும் மரபாதலின், “வேதிய சூழ்ந்தனர்” என்கிறார். “ஓதல் அந்தணர் வேதம் பாடச், சீரினி, கொண்டு நரம்பினிது இயக்கி, யாழோன் மருதம் பண்ண” (மதுரை:655-8) என்பர் மாங்குடி மருதனார். “இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்” (பள்ளி) என்பது திருவாசகம். காலாயுதம் - சேவற் கொடி.

     (8)