549. தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்
சுப்பிர மணியரே வாரும்
வைப்பின் அணியரே வாரும்.
உரை: தோத்திரம் - துதிப் பாடல்கள். இதனை ஒரு காலத்தில் “சோத்தம்” என்று வழங்கினர். “சோத்தம் பெருமான் என்று தொழுது” (குறுக்கை) என்று நாவுக்கரசரும், “துயருறுகின்றேன் சோத்தம் எம் பெருமானே” (ஆசை) என்று மாணிக்க வாசகரும் குறிப்பது காண்க. வைப்பின் அணியர் - சேமநிதி போல அருகிருந்து உதவுபவர். இதைத் தான் “எய்ப்பில் வைப்பு” எனப் பெரியோர் கூறுகின்றனர். “நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பே” (வலிவலம்) என நம்பியாரூரரும், “எய்ப்பினில் வைப்பு வாழ்க” (அண்டப்) என மாணிக்க வாசகரும் கூறுகின்றனர். (12)
|