55. வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ
மணிச்சுடரே
நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென
நண்ணி நின்றேன்
ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம்
இருங்கணிப்பூந்
தேனோ டருவி பயிலும் தணிகைச்
சிவ குருவே.
உரை: பெரிய வேங்கையின் பூக்கள் சொரியும் தேன் கலந்து அருவிகள் வீழும் தணிகை மலையில் எழுந்தருளும் சிவகுருவே, வானுலகத்துக் குடிகளாகிய தேவர்களை இனிது வாழ வைத்த தெய்வமாகிய மாணிக்க மணியின் ஒளி திகழ்பவனே, நான் ஓர் எளியனாதலால் என் துன்பம் போக்கி ஆண்டு கொள்க என வேண்டியடைந்துள்ளேன்; என்னைக் கண்டும் நின் மனம் இரங்காதிருப்பது ஏனோ, அறியேன், எ.று.
கணி-வேங்கைமரம். இதன் பூக்களின் தேனைக் களிப்பு மிகுதி பற்றி வண்டினம் உண்பதில்லையாதலின், தானாக ஊறிச் சொரியும் அத்தேன் அருவி நீரிற் கலந்து இழிதல் தோன்ற, “இருங்கணிப் பூந்தேனோ டருவி பயிலும் தணிகை” என்று சிறப்பிக்கின்றார். வேங்கைப் பூவின் தேன் களிப்பு மிகவுடைய தென்பது கவிஞர் மரபு. சிவபெருமானுக்குக் குரு வடிவில் இருந்து பிரணவப் பொருளைச் சொல்லிக் காட்டியது பற்றி முருகனைச் சிவகுரு எனச் சிறப்பிக்கின்றார். “தனக்குத் தானே மகனாகிய தத்துவன், தனக்குத் தானே யொரு தாவரும் குருவுமாய்த், தனக்குத் தானே யருள் தத்துவம் கேட்டலும், தனக்குத் தான் நிகரினான் தழங்கி நின்றாடினான்” (வீராட்ட. 118) என்று தணிகைப் புராணம் கூறுவது காண்க. அசுரர்களால் தேவர்கட்கு இடுக்கணுண்டாம் போது, அவ்வசுரர்களைப் பொருதழித்தலும், தேவர்களை வாழ்வித்தலும் புராணங்கள் பாரித் துரைக்கின்றன. அதனால் “வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே” என்று பரவுகின்றார். வானோர்க்கு வாழ்வளிக்கும் வள்ளலாகிய நீ என்னையும் வாழ்வித்தல் வேண்டும் என்பது குறிப்பு. துன்பம் தாக்கும் போது அதனைத் தாங்கும் வலிமை எனக்கு இல்லை யென்பார், “நான் ஓர் எளியன்” எனவும், எளியாரைத் துன்பங்கள் தொடர்ந்து போந்து வருத்துதல் இயல்பாதலால், துன்புற்று வந்தடைந்த என்னைத் துன்பம் துடைத்து ஆட்கொள்ள வேண்டும் என முறையிடுகின்றாராதலால், “என் துன்பறுத்து ஆள் என நண்ணி நின்றேன்” எனவும் உரைக்கின்றார். முறையிட்டும் துன்பம் நின்று வருத்துவது பற்றி, “ஏனோ நின் நெஞ்சம் இரங்காத வண்ணம்” என உரைக்கின்றார். துன்பம், ஈறு குறைந்து துன்பு என வந்தது.
இதனால் துன்பம் நீக்கி ஆண்டருள்க என வேண்டிக் கொண்டவாறாம். (55)
|