52. தனித் திருத்தொடை

அஃதாவது, தனிப்பாடல்களின் தொகுதி

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

550.

    என்னிரு கண்ணின் மேவும்
        இலங்கொளி மணியே போற்றி
    பன்னிரு படைகொண் டோங்கும்
        பன்னிரு கரத்தோய் போற்றி
    மின்னிரு நங்கை மாருள்
        மேவிய மணாள போற்றி
    நின்னிரு பாதம் போற்றி
        நீளவடி வேல போற்றி.

உரை:

     என்னுடைய இரண்டு கண்களிலும் பொருந்திய விளக்கம் தரும்ஒளி மணியே போற்றி; பன்னிரண்டு வகையான படைகளை யேந்தியுயரும் பன்னிரண்டு கைகளை யுடையவனே போற்றி; மின்னற் கொடி போன்ற இடையை யுடையை நங்கையராகிய வள்ளி தெய்வயானை ஆகிய மனைவியர் உள்ளங்களில் அன்பால் எழுந்தருளி யிருக்கும் கணவனே போற்றி; நின்னுடைய இரண்டாகிய திருவடிகளும் போற்றி; நீண்ட வடிவேலை யுடையவனே போற்றி, எ. று.

     கண்ணிற்கு ஒன்றாக இரு கண்களிலும் திகழும் இரண்டு கருமணிகள் போன்று ஞான வொளி நல்குதலால், “கண்ணின் மேவும் இலங்கு ஒளி மணியே” என வுரைக்கின்றார். அளியும் தெறலுமாகிய தொழில் செய்யும் பரமனுக்கு வகைக்கு ஆறாக இருவகைப் பன்னிரண்டு கருவிகள் அடையாளமாக வுள்ளமை தோன்றப் “பன்னிருபடை கொண்டோங்கும் பன்னிரு கரத்தோய்” என்று பகர்கின்றார். “பன்னிரு கையும் பாற்பட இயற்றி” என வுரைக்கும் நக்கீரனார், “விண்செலல் மாபின் ஐயர்க்கேந்தியது ஒருகை, உக்கம் சேர்த்தியது ஒரு கை, ஒருகை நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசையது, அங்குசம் கடாவ ஒருகை, ஒரு கை ஐயிரு வட்டமொடு எஃகு வலந் திரிப்ப, ஒரு கை மார்பொடு விளங்க, ஒரு கை தாரொடு பொலிய, ஒரு கை கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப, ஒரு கை பாடின் படுமணி இரட்ட, ஒரு கை நீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒரு கை வானர மகளிர்க்கு வதுவை சூட்ட” (முருகு) எனக் கூறுகின்றார். கரம் - கை, மின்னற் கொடி போன்ற மிளிர்கின்ற இடையை யுடையவர் என்றற்கு, “மின்னிரு நங்கை” எனக் குறிக்கின்றார். தெய்வ மகளிருள் உயர்வற உயர்ந்தவ ராதலின் வள்ளி தெய்வயானை யிருவரையும் பொது வாய்பாட்டால், “நங்கை மார்” எனக் குறிக்கின்றார். மணத்தால் ஆட்கொள்ளப் பட்டவராதலால், “நங்கைமார் மணாள” என நவில்கின்றார்.

     இதனால் தணிகை முருகன் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்டு படைக்கோலத்துடன் வள்ளி தெய்வயானை யிருவருடன் எழுந்தருளும் திருவருட் காட்சியை மனக்கண்ணிற் கண்டு போற்றி செய்தவாறாம்.

     (1)