கல

கலிநிலைத்துறை

551.

  மதிவளர் சடைமுடி மணிதரு சுரர்முடி மணியென்கோ
    பதிவளர் சரவண பவநவ சிவகுரு பதியென்கோ
    துதிவளர் துணையடி தொழுமடி யவர்பெறு துணையென்கோ
    நிதிவளர் பரசுக நிலைபெறு நெறிதரு நினையானே.

உரை:

     நிதி வகைகள் தரக் கூடிய நலத்திலும் மேலான இன்ப நிலையைப் பெறுதற்குரிய நன்னெறியை அறிவுறுத்தும் பெருமானாகிய உன்னை, யான், பிறை யணிந்த சடை முடியை யிடைய மணியாகிய சிவபெருமான் பெற்றளித்த தேவர்கள் தமது முடியிற் சூடிக் கொள்ளும் மணி யென்பேனா? நல்ல இடமாகச் சிறந்த சரவணப் பொய்கையில் தோன்றினவனே, புதிய சிவம் பெருக்கும் குருநாதன் என்பேனா? துதி செய்தற் கமைந்த திருவடி யிரண்டையும் தொழுது வணங்கும் அடியார்கள் பெற நின்ற துணை யென்பேனா? என்னென்பேன்! எ. று.

     உலகிற் பெறலாகும் செல்வங்களாற் பெறப்படும் சுகம் அபரசுகம் எனவும், திருவருட் செல்வத்தால் எய்தப் பெறும் ஞான வின்பம் பரசுகம் எனவும் வேறு படுத்தப் படுதலால், “நிதிவளர் பரசுக நிலை” என்று கூறுகின்றா. நிதி யென்றது திருவருட் செல்வத்தை யாதலால், அது நல்கும் நலம், உலகியற் செல்வங்கள் நல்கும் நலத்திலும் உயர்வு மிக்கது என்பது விளங்கப் “பரசுக நிலை” உனச் சிறப்பிக்கின்றார். நிதி யென்பது பொதுவாகச் சங்கம் பதுமம் என்ற நிதி யிரண்டினையும் குறிக்கும் என்க. இரண்டும் பெற்றோர் மண்ணுலகும் விண்ணுலகு மாகிய இரண்டையும் ஆட்சி செய்யும் பெரும் போகம் எய்துவர் என்ப. “சங்கநிதி பதுமநிதி யிரண்டும் தந்து தரணி யொடு வானாளத் தகுவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போ மல்லோம்” (தாண். தனி) எனத் திருநாவுக்கரசர் கூறுவது காண்க. நிதி பெறும் நெறிகளை யறிவுறுத்து உலகியற் பொருணெறிப் புலவர் (Political Economist) மங்கும் அபரசுகமே நல்குவாராக, முருகப் பெருமான் திருவருட் பரபோகம் பெறும் நிலை (Economy of Divine Grace) அறிவுறுத்துகிறார் என்பதாம். மதிவளர் சடை முடி மணி யென்றது சிவபெருமானை, மணி தரு சுரர் முடி மணி யென்பது சிவனளிக்க வந்த முருகப் பெருமானை, சுரர் - தேவர்கள். தேவர் அனைவரும் தலையில் மணி முடி யுடையவர் என அறிக. “அண்ணாமலையான் அடிக் கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடி” (திருவெம்பாவை) என மாணிக்க வாசகர் உரைப்பது காண்க. என்கு, குற்றுகர வீற்றுத் தன்மை வினை; ஈற்றில் ஓகார விடைச் சொற் பெற்று என்கோ என வந்தது; “மலையிடைப் பிறவா மணியே என்கோ” (சிலப். மலையறம்) என வருவது அறிக. ஓகாரம் சிறப்பித்தற் கண் வந்தது. பதி - இருந்து வாழும் இடம், பவன், ஈண்டு உருவாயவன் என்னும் பொருளில் வந்துளது. சிவபெருமான் குருவாய் எழுந்தருளி ஆன்மாக்களுக்கு உண்மை ஞானம் அருளுவது அனாதியருட் செயலாதலால், முருகப் பெருமான் தோன்றிச் சிவகுருவானது பின்னர்த்தாதல் பற்றி “நவ சிவ குரு பதி” என மொழிகின்றார். குருபதி என்புழிப் பதி என்பது நாதன் என்னும் பொருளதாம். யாவரும் தொழும் தகைமை யுடைய திருவடி என்பாராய்த் “துதி வளர் துணையடி” என்றும், அத்துணை யடிகளைத் தொழுது வழிபடுவோர்க்கு உலகியல் பொருள் வாழ்விற்கும் அருளியல் ஞான வாழ்விற்கும் துணையாதல் ஒரு தலையாதல் விளங்க, “அடியவர் பெறு துணை யென்கோ” என்றும் இயம்புகின்றார். “அருந்துணை” (கோயில்) என்று நாவுக்கரசரும், “தனித்துணை நீ நிற்க” (நீத்தல்) என்று மாணிக்க வாசகரும் உரைப்பது காண்க.

     இதனால், முருகப் பெருமான் மணியாகவும் குருவாகவும், துணையாகவும் அருள்புரியும் நலம் பாராட்டியவாறாம்.

     (2)