கட

கட்டளைக் கலித்துறை

552.

                     முருகா சரணம் சரணமென் றுன்பதம் முன்னியுள்ளம்
    உருகாத நாயனை யேற்குநின் தண்ணருள் உண்டுகொலோ
    அருகாத பாற்கடல் மீதே யனந்தல் அமர்ந்தவன்றன்
    மருகாமுக் கண்ணவன் மைந்தா எழில்மயில் வாகனனே.

உரை:

     குறைதல் இல்லாத பாற்கடலின் மீது அறிதுயில் கொண்ட பெருமானாகிய திருமாலுக்கு மருகனே, மூன்று கண்களையுடைய சிவனுக்கு மகனே, அழகிய மயிலை ஊர்தியாக வுடையவனே, “முருகா நின்னடி, முருகா நின்னடி” என்று உனது திருவடியை முற்படப் பன்முறை நினைந்து மனம் உருகாத நாய் போன்ற எனக்கு உன்னுடைய தண்ணிய திருவருள் உண்டாகுமோ, அருள்புரிக. எ. று.

     தமிழில் “நின்னடி நின்னடி” என மணிமேகலை யாசிரியர் கால முதலாகச் சொல்லித் துதிக்கப்பட்ட திருவடி, திருநாவுக்கரசர் காலத்து, “அரவணையான் சிந்தித் தரற்றும் அடி” எனவும், “அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும் அடி, அழகெழுதலாகா அருட் சேவடி” எனப் புகழ்ந்துரைக்கப்பட்டது; பிற்காலத்தே சரணமாக மாறிப் பெறு வழக்காய் விட்டது. “சரவணத்தான் கைதொழுது சாரும் அடி, சார்ந்தார்க் கெல்லாம் சரணாம் அடி” எனப் பையப் புகுந்த அந்தச் 'சரண்' என்னும் சொல் ஈற்றில் அம்முப் பெற்றுச் சரணமென்றுருக் கொண்டு பேரிடம் பெற்றது, வடசொல் தமிழிற் புகுந்த வரலாற்றை நன்கு காட்டுகிறது. முன்னுதல்-முற்பட நினைத்தல். அருகாத பாற்கடல்-மேகங்கள் சென்று முகத்தலால் குறையாத கடல். ஏனை நீர்க்கடல்கள் மேகங்கள் முகத்தலால் குறைபடும் என்பது பண்டையோர் கருத்து. “கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து” (பரிபா) என்பது காண்க. இனி, “மழைகொளக் குறையாது புனல்புக மிகாது, கரைபொரு திரங்கும் முந்நீர்” (424-5) என்று மதுரைக்காஞ்சி கூறுவதால் மேற்கூறியதற்கு மாறுபட்ட கருத்தும் அந்நாளில் நிலவினமை அறியலாம். அனந்தல்-உறக்கம்.

     (3)