554. செக்கச் சிவந்தே திகழ்ஒருபால் பச்சையதாய்
அக்கட் பரிதிபுரத் தார்ந்தோங்கும் - முக்கண்
குழைக்கரும்பீன் முத்துக் குமார மணியேயென்
பிழைக்கிரங்கி ஆளுதியோ பேசு.
உரை: மிகச் சிவந்து திகழும் மேனியில் ஒரு பக்கம் பச்சை நிறமுற்று அழகிய இடத்தையுடைய பரிதிபுரம் எனப்படும் புள்ளிருக்கு வேளுரின்கண் எழுந்தருளி யோங்கும் முக்கண்ணும் குழையுமுடைய கரும்பாகிய சிவபிரான் அளித்த முத்துக்குமாரசாமி யாகிய மணியே, யான் செய்த குற்றங்கட் கிரங்கி என்னை ஆளுவாயோ, சொல்லுக, எ. று.
செக்கர்ச்சிவந்து என்பது, “செக்கச் சிவந்து” என வந்தது. செக்கர் - சிவப்பு நிறம். திகழ், முதனிலைத் தொழிற் பெயர், இஃது ஆகு பெயராய்த் திகழ்கின்ற மேனியைக் குறித்து நின்றது. உமையம்மை பச்சை நிற மேனியர் ஆதலால் அவளுக்குரிய இடப்பாகத்தை, “ஒருபால் பச்சையதாய்” என்று குறிக்கின்றார். அங்கண், “அக்கண்” என வலித்தது. சூரியன் வழிபட்ட இடமாதல் பற்றிப் புள்ளிருக்குவேளூர், “பரிதிபுரம்” எனப்படுகிறது. முக்கண்ணும் குழையு முடைய கரும்பு - மூன்று கணுக்களையும் நீண்ட தோகைகளையு முடைய கரும்பு. இது சிவபெருமானுக்கு உருவகம். கரும்பிடத்துப் பிறந்த முத்தையும் மணியினத்திற் சேர்த்து மணி யென்பராகலின், முருகப் பெருமானைக் “கரும்பீன் மணியே” என்கிறார். “பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி” (சதகம்) என மணிவாசகர் கூறுதலின், “பிழைக்கிரங்கி ஆளுதியோ” என வேண்டுகின்றார்.
இதனால், புள்ளிருக்கு வேளூர் முத்துக் குமாரக் கடவுளைப் பிழை பொறுத் தருளுமாறு வேண்டிக் கொண்டவாறாம்.
இவை யிரண்டு வெண்பாக்களும் புள்ளிருக்கு வேளூர் என்ற வைத்தீசுவரன் கோயிலுக்குச் சென்று அங்கிருந்த உலகநாதத் தம்பிரான் சிவாமிகளோடு அளவளாவிப்பின் முத்துக் குமாரக் கடவுளை வழிபட்ட போது வள்ளற் பெருமான் பாடியவை என்பர். (5)
|