அறுச
அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
555. திருமாலைப் பணிகொண்டு திகிரிகொண்ட
தாருகனைச் செறித்து வாகைப்
பெருமாலை அணிதிணிதோள் பெருமானே
ஒருமான்றன் பெண்மேற் காம
வருமாலை உடையவர்போல் மணமாலை
புனைந்தமுழு மணியே முக்கட்
குருமாலைப் பொருள்உரைத்த குமாரகுரு
வேபரம குருவே போற்றி.
உரை: திருமாலை வென்று அடிப்படுத்தி, அவன் கைப்படையாகிய சக்கரப் படையைக் கைப்பற்றிக் கொண்டு, செருக்கிய தாருகன் என்ற அசுரனைப் போரில் நெருக்கிக் கொன்று வெற்றியாகிய பெரிய மாலையை யணிந்த வலிய தோள்களையுடைய முருகப் பெருமானே, புனத்தில் மேய்ந்த ஒரு மானினுடைய வயிற்றில் தோன்றிய வள்ளியாகிய பெண் மேல் காம விச்சையால் வருகின்ற மயக்க முடையவர் போல் அவள்பாற் சென்று கூடித் திருமண மாலை யணிந்த முழு மணியே, முக்கண்ணையுடைய சிவபெருமானுக்குக் குருவாய் மயக்கந் தெளிவிக்கும் ஞானப் பொருளை யுரைத்த இளமைத் திருமேனியை யிடைய குருவே, மேலான ஞான குருவே காத்தருளுக. எ. று.
“பணிகொண்டு” எனவே வென்று அடிப்படுத்தமை பெற்றாம். “பணிகொண்டு திகிரி கொண்டான்” எனவே விரும்பித் தரக் கொள்ளாது சக்கரப் படையை வலிதிற் கவர்ந்து கொண்டமை பெறப்படும். “செறித்து” எனவே, வேற்படையைச் செலுத்தி வென்றமை பெறப்படும். தாருகனையும் கொன்று, அவனிருந்த கிரௌஞ்ச மலையையும் துளைத்துத் துகள் படுத்திப் பெற்ற வெற்றி சிறிதன்மையின் ஆங்கு அணிந்து கொண்ட வெற்றிமாலையை வாளா வாகை மாலை யென்னாது “வாகைப் பெருமாலை” என்று சிறப்பிக்கின்றார். இளையனாயினும் மிகத் திண்ணிய தோள்களை யுடையன் என்பதற்குத் “திணிதோள் பெருமானே” என்று புகழ்கின்றார். விலங்காயினும் ஒப்புயர்வில்லாத அழகு உடைய மானிட மகளைப் பெற்றமையின், “ஒரு மான்” எனச் சிறப்பிக்கின்றார். காம வருமால் - காமத்தால் எய்துகின்ற மயக்கம், உடையவர் போல் என்பதால் இல்லாமை பெறப்பட்டது. முழுமணி, ஏனைமணிகள் போல் கழுவப் படாது இயல்பாகவே ஞான வொளியுடைய மணி. “கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால் நற்பால் அழியும்” (சீவக) என்று திருத்தக்க தேவர் கூறுவது காண்க. “முக்கட் குரு” என்ற விடத்துக் குவ்வுருவு விகாரத்தால் தொக்கது. மாலைப் பொருள் - மயங்குதற் கேதுவாகிய பொருள். உரைத்த - தெளிய உரைத்தருளிய. உரைத்த குருவைக் “குமார குரு” என்பதால், கேட்ட குரு முதிய குரு என்பதும், “பரம குரு” என்பதால், முதியவரும் கேட்டு இன்புறத் தக்க மேலான குரு என்பதும் உணரலாம்.
இதனால் முருகன் குமார குருவாய்ப் பரம குருவாகிய திறம் விளக்கியவாறாம். (6)
|