556.

    தோடேந்து கடப்பமலர்த் தொடையொடுசெங்
        குவளைமலர்த் தொடையும் வேய்ந்து
    பாடேந்தும் அறிஞர்தமிழ்ப் பாவொடுநா
        யடியேன்சொற் பாவும் ஏற்றுப்
    பீடேந்தும் இருமடவார் பெட்பொடும்ஆங்
        கவர்கண்முலைப் பெரிய யானைக்
    கோடேந்தும் அணிநெடுந்தோட் குமாரகுரு
        வேபரம குருவே போற்றி.

உரை:

     இதழ்கள் பொருந்திய கடப்பம் பூமாலையோடு செங்குவளை மலர்களாலாகிய மாலையும் அணிந்து, பெருமை யுற்ற புலவர்களின் தமிழ்ப் பாட்டுக்களோடு நாயேனுடைய சொல்மாலையும் ஏற்றருளிப் பெருமை கொண்ட வள்ளி தெய்வயானை என்ற இளமகளிர் இருவருடைய கொங்கைகளாகிய பெரிய யானைக் கொம்புகளை அன்புடன் தழுவித் தாங்கும் அழகிய உயர்ந்த தோள்களையுடைய குமார குருவாகிய பரம குருவே, அடியேனைக் காத்தருள்க, எ. று.

     தோடு-பீவின் இதழ். தொடை-மாலை. கடம்பின் பூ முருகப் பெருமானுக்கு விருப்பமான பூவாதலின், “கடம்ப மலர்த் தொடையும்” என்றும், தணிகைப் பதியில் முருகப் பெருமானுக்குச் செங்குவளை சிறப்புறக் கிடைத்தலின், “செங்குவளை மலர்த் தொடையும் வேய்ந்து” என்றும் கூறுகின்றார். செங்குவளையினும் அழகில் மிகுந்தும், நறுமணத்தால் உயர்ந்தும் இருப்பது பற்றிக் “கடப்ப மலர்த் தொடையொடு” என ஒடுக்கொடுத்துச் சிறப்பிக்கின்றார். “ஒருவினை யொடுச் சொல் உயர்பின் வழித்தே” (சொல். 91) என்பது தொல்காப்பியம். பாடு, பீடு என்பன பெருமை குறிக்கும் சொற்கள். அறிஞர்-புலவர். பணிவுடைமை தோன்ற, “நாயடியேன்” என்கின்றார். பொருள் நலமில்லாத பாட்டு என்றற்குச் “சொற்பா” என்று குறிக்கின்றார். பெட்பு-அன்பு. தோன்றிய அன்பு குன்றாமல் பேணப் படுங்கால் பெட்பு எனப்படுகிறது. மடவார்-இளமகளிர். மகளிரின் கொங்கைக்கு யானைக் கோட்டை உவமம் கூறுதல் மரபாதல் பற்றிப் “பெரிய யானைக் கோடு” என உருவகஞ் செய்கின்றார். “ஏற்றுப் பெட்போடு கோடேந்தும் தோள்” என முடிக்க. பெட்போடும் என்ற விடத்து உம்மை இசைநிறை.

     இதனாலும் இளங்குமார குருவின் பரமாந்தன்மை கூறியவாறாம்.

     (7)