557.

    நீர்வேய்ந்த சடைமுடித்துத் தோலுடுத்து
        நீறணிந்து நிலவும் கொன்றைத்
    தார்வேய்ந்து விடங்கலந்த களங்காட்டி
        நுதலிடைஓர் தழற்கண் காட்டிப்
    பேர்வேய்ந்த மணிமன்றில் ஆடுகின்ற
        பெரும்பித்தப் பெருமான் ஈன்ற
    கூர்வேய்ந்த வேல்அணிதோள் குமாரகுரு
        வேபரம குருவே போற்றி.

உரை:

     கங்கை தங்கிய சடை முடி தரித்துக் தோலாடை யுடுத்துத் திருநீறணிந்து விளங்கும் கொன்றை மாலையை மார்பிற் பூண்டு கடல் விடத்தால் கறைபட்ட கழுத்தைக் காட்டி, நெற்றியின் கண் நெருப்புக் கண் கொண்டு, புகழ் பெற்ற அழகிய அம்பலத்தில் ஆடல் புரியும் பெரும் பித்தப் பெருமானாகிய சிவபெருமான் அளித்த கூரிய வேற்படையை யேந்தும் அழகிய தோள்களையுடைய குமார குருவாகிய பரம குருவே, என்னைக் காப்பாற்றுவாயாக, எ. று.

     நீர் என்றது கங்கையை. முடித்தல் - முடியிட்டுக் கொள்ளுதல். தோல் - புலித்தோல். யானைத்தோலைப் போர்வையாகவும், புலித்தோலை ஆடையாகவும் உடுப்பது பற்றித், “தோலுடுத்து” என்று கூறுகிறார். பொன்னிறவொளி கொண்டு விளங்குவது பற்றி, “நிலவு கொன்றத் தார்” என்கின்றார். தார் - தோளிலும் மார்பிலும் அணியும் மாலை. கரிய விட முண்டமையால் பொன்னிறக் கழுத்துக் கறுத்தமை பற்றி, “விடம் கலந்த களம் காட்டி” என விளம்புகிறார். களம் - கழுத்து. விடத்தால் தீங்குண்டாகாமை தோன்றக் கழுத்தில் அதன் கரிய அடையாளம் விளங்குவது கொண்டு, “விடம் கலந்த களம் காட்டி” என்றும், தனக்கு ஒன்றும் தீது உண்டாகாதபடி நெருப்பை நெற்றிக் கண்ணிற் கொண்டமையின், “நுதலிடை ஓர் தழற் கண் காட்டி” என்றும் உரைக்கின்றார். மணி மன்று-அழகிய அம்பலம். தன்பால் உயிர்த் தொகை யனைத்தும் மிக்க பற்றுக் கொள்ளுமாறு செய்தலால், இறைவனைப் “பெரும்பித்தன்” என்று புகழ்கின்றார். பெரும் பித்தன் - பெருமையை யுடைய பித்தன். உலகிற் பித்தராயினார் சிறுமை யுற்று யாவராலும் இகழப்படுவது போலின்றி உயர்ந்த சான்றோர்காளாலும் தேவதேவர்களாலும் புகழ்ந்து வணங்கப் படுவதால், “பெரும் பித்தப் பெருமான்” என்று பராவுகின்றார். “பெண் பால் உகந்தான் பெரும்பித்தன்” (சாழல்) என்பர் மாணிக்க வாசகர். இளமைப் பண்பு குன்றாத குரு என்ற பொருள்படக் “குமார குருவே” எனவும், இளையனாயினும் முதியரில் முதியோரும் உணராத பிரணவத்தின் முதுபொருளை முழுதும் உணர்த்தி மேம்பட்ட குருபரன் என்றற்குப் “பரம குருவே” எனவும் பணிந் தேத்துகின்றார். இதனாலும், குமார குருவின் பரம குருவாம் தன்மை நினைப்பித்தவாறாம்.

     (8)