558.

    பெண்குணத்தில் கடைப்படும்ஓர் பேய்க்குணங்கொள்
        நாயேன்றன் பிழைக ளெல்லாம்
    எண்குணப்பொற் குன்றேநின் திருவுளத்தில்
        சிறிதேனும் எண்ணேல் கண்டாய்
    பண்குணத்தில் சிறந்திடுநின் பத்தர்தமைப்
        புரப்பதுபோற் பாவி யேனை
    வண்குணத்தில் புரத்தியிலை யேனும்எனைக்
        கைவிடேல் வடிவே லோனே.

உரை:

     வடிவேலை யேந்தும் முருகப் பெருமானே, பெண்களிடத்திற் காணப்படும் குணங்களில் கீழ்ப்பட்ட தொரு பேய்க்குணம் படைத்த நாயேனுடைய குற்றங்கள் அனைத்தையும் நின் திருவுள்ளத்தில் சிறிதும் கொள்ள லாகாது, எண் வகைக் குணங்களே யுருவாகிய பொற் குன்றமே, நற்பண்பால் அமைந்த குணங்களால் சிறப்புறும் நின்னுடைய மெய்யன்பர்களைப் பாதுகாப்பது போல், பாவியாகிய என்னையும் நின் வண்மைக் குணத்தால் காத்தருள்க; காவா தொழியினும் என்னைக் கைவிட்டொழியாதே, எ. று.

     புறவுலகிற் பரந்துசென்று பலரோடும் கலந்து பழக வுண்டாகும் விரிந்த மனப் பண்புகள் பெண்கட்கு அமைய வாய்ப்பின்மையால், குணங்களிற் சில குறைதற்கும் இலவாதற்கும் சிறுமை யுறுதற்கும் இடமிருத்தலால், “பெண்குணம்” என எடுத்துப் பேசுகின்றார். சிறுமைக் குணங்களில் கடையாயது மனவமைதி யின்றிக் கண்ட பொருளில் ஆசை வைத்து அலையும் பேய்க் குணமாகும். அதனால் “பெண் குணத்தில் கடைப்படும் ஓர் பேய்க்குணம்” என்றும், அதனைத் தான் உடைமை புலப்படப் “பேய்க்குணங் கொள் நாயேன்” என்றும் இயம்புகின்றார். நாயேன் - நாய் போற் கடையாய குணஞ் செயலுடையேன். “நாயிற் கடையாய்க் கிடந்த அடியேன்” (சிவபு.) என்று திருவாசகம் ஓதுவது காண்க. எண்குணம்: தூய வுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், தன்வயத்தனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பில் இன்ப முடைமை என்பவை. எண்குண மென்பதற்கு நல்லன வென எண்ணப்படும் குணமனைத்தும் என்றலும் உண்டு. குணமே உருவாகிய நின் ஞானக் கண்களுக்கு என்பால் எண்ணிறந்த குற்றங்கள் காணப்படுமாகலின் அவற்றைப் பொருளாகக் கொள்ளாமல் பொறுத்து ஒழித்தருள வேண்டும் என்பாராய், “திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் வேண்டா” எனவும், சிறிது எண்ணினும் நினது திருவருட் பண்பு தடைப்படும் என்பார், “சிறிதேனும்” எனவும் கூறுகின்றார். பண்குணம் - இறைவன்பால் அன்பு செய்தற்குரிய உயர்குணம்; “பண் சுமந்த பாடல்” தொடுத் திசைக்கும் பண்பு எனினும் அமையும். பாடிப் பரவுவோர்க்கு விரைந்து அருள் பண்ணுவது இறைவனுக்குப் பண்பு என்பது பற்றிப் “பத்தர் தமைப் புரப்பது போல்” என்று கூறுகிறார். “பாடுவாருக் கருளும் எந்தை” (முதுகுன்) என்று ஞானசம்பந்தர் கூறுவர். வண்குணம் - வண்மைக்குணம்; அஃதாவது கொடைப்பண்பு. புரத்தி, - காத்தருள்வாயாக. உனது வண்மையை யேற்றற்குரிய தகுதி என்பால் இல்லை யேனும் என்பதற்கு, “இலையேனும்” என்கின்றார். “புரத்தியிலை” என்பதை ஒரு சொல் நீர்மைத்தாகக் கொண்டு புரந்திலை எனப்பொருள் கோடலும் உண்டு.

     இதனால் காக்கப் படுதற்குரிய தகுதி இல்லையாயினும் உனது வண்மைக்குணத்தால் காத்தருள்க என வேண்டியவாறாம்.

     (9)