கல

கலிவிருத்தம்

559.

    சத்திவேல் கரத்தநின் சரணம் போற்றிமெய்ப்
    பத்தியோ டருச்சனை பயிலும் பண்பினால்
    முத்திசார் குவர்என மொழிதல் கேட்டுநல்
    புத்தியோ டுன்பதம் புகழ்வர் புண்ணியர்.

உரை:

     சத்தி வேலைக் கையில் ஏந்துபவனே, நின்னுடைய திருவடியை வழிபட்டு, உண்மை யன்போடு அருச்சனை செய்யும் பண்பாடுடையோர் அதனால் முத்தி யெய்துவர் என்று பெருமக்கள் கூறுவது கேட்டு நல்வினையாளர்களாகிய புண்ணியர்கள் நின்னுடைய திருவடிகளைப் பத்தியுடன் போற்றிப் புகழ்கின்றார்கள், எ. று.

     சிவனது சத்தி யனைத்தும் தன்கட் கொண்ட வேல் ஆதலால், முருகனது வடிவேல் “சக்தி வேல்” எனப்படுகிறது. உள்ளத்தே நிறைந்திருக்கும் பத்தி, புறத்தேயும் வெளிப்படுமாறு விளங்குவது மெய்ப்பத்தி. இதனை மெய்யன்பு என்றும் கூறுவர். பத்தியின் பயன் முத்தி என்று பெரியோர் மொழிகின்றமையின், “பத்தியோ டருச்சனை பயிலும் பண்பினால் முத்தி சார்குவர்” என மொழிகின்றார். “பத்தி மலர் தூவ முத்தியாகுமே” (ஆரூர்) என ஞானசம்பந்தரும், “முத்திக்குப் பத்தி நெறி” (அச்சோ) என மாணிக்கவாசகரும் மொழிவது காண்க. நற்புத்தி-நன்ஞானம், புண்ணியர் - நல்வினையாளர்.

     இதனால், பத்தியே முத்திக்கு நெறி என்பது வற்புறுத்தியவாறாம்.

     (10)