56.

    கையாத துன்பக் கடல்மூழ்கி நெஞ்சம்
        கலங்கி யென்றன்
    ஐயாநின் பொன்னடிக் கோல மிட்டே
        னென்னை யாண்டு கொளாய்
    மையார் தடங்கண் மலைமகள் கண்டு
        மகிழ் செல்வமே
    செய்யார் தணிகை மலை யரசே யயிற்
        செங்கையனே.

உரை:

     வயல்கள் சூழ்ந்த தணிகை மலைக்கு வேந்தே, வேலேந்தும் சிவந்த கையை யுடையவனே, மை தீட்டிய பெரிய கண்களையுடைய உமையம்மை கண்டு இன்புறும் செல்வ மகனே, எடுத்தெறியாத துன்பம் நிறைந்த வாழ்க்கைக் கடற்குள் ஆழ்ந்து மனம் கலங்கி ஐயனே, நின் பொன்னடி நோக்கி ஓலமிட்டே னாதலால் என்னை ஆட்கொண் டருள்வாயாக, எ. று.

     நன்செயும் புன்செயுமாகிய வயல்கள் சூழ இருத்தலால் “செய்யார் தணிகை” என்று சிறப்பிக்கப்படுகிறது, உழுது வித்திப் பயிர் செய்தற்கேற்பப் பண்படுத்தப்படும் நிலப்பகுதி செய் யெனப்படு மென அறிக. சத்தியா கலின் எப்போதும் வேற்படையை ஏந்துவதால் சிவந்தமை பற்றி “அயிற் செங்கையனே” என்று கூறுகின்றார். அயில் - வேல். மகளிரின் பெரிய கண்கட்கு மை தீட்டல் பொலிவு தருதலால், மலைமகளாகிய உமையம்மையை “மையார் தடங்கண் மலைமகள்” என்றும், மெய் வன்மையும் குன்றாத இளமையும் ஞான வளமையும் ஒருங்கே கொண்டு அழகு திகழும் மகனாதல் பற்றி, “மலைமகள் கண்டு மகிழ் செல்வமே” என்றும் துதிக்கின்றார். கைத்தல் - எடுத்தெறிதல். தன் கண் வீழ்ந்த பொருளை மேலே எடுத்தெறிதல் கடற்கு இயல்பென அறிக. “சிலம்பிரங்கும் இன்குரல் கைத் தெடுத்தலின் காமம் தாழ்ந்ததே” (சீவக. 2683) என்று தேவர் கூறுவதும் காண்க. துன்பக் கடலாதலின் ஆழ அமுக்கு மியல்பிற் றென்றற்குக் “கையாத துன்பக் கடல்” என்று இயம்புகிறார். இறைவன் அடி சேர்ந்தார்க் கல்லது துன்பக் கடலை நீந்தல் அரிதெனப் பெரியோர் அறிவுறுத்துவதால், “பொன்னடிக்கு ஓல மிட்டேன்” என்றும், என்னைக் கரையேற்றி அருள் செய்க என்பார், “என்னை ஆண்டு கொளாய்” என்றும் கூறுகின்றார். கொளாய், கொள் என்னும் பொருளது. “செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல், செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே” (சொல் : எச்ச. 54) என ஆசிரியர் உரைப்பது காண்க.

     இதனால், கரையேற விடாது ஆழ வமுக்கும் துன்பக் கடலில் வருந்தி முருகன் திருவடி நினைந்தமை கூறியவாறாம்.

     (56)