கல
கலித்துறை
560. தேனே அமுதே சிவமே தவமே தெளிவேயெங்
கோனே குருவே குலமே குணமே குகனேயோ
வானே வளியே அனலே புனலே மலையேயென்
ஊனே உயிரே உணர்வே எனதுள் உறைவானே.
உரை: தேனும் அமுதமும் போல்பவனே, சிவமாய்த் தவத்தால் தெளியப் படுபவனே, எங்கட்குக் கோனும் குருவும் ஆனவனே, குலத்தால் மிக்குறும் குணமே, குகப்பெருமானே, விண், காற்று, நெருப்பு, நீர், மலை நிற்கும் மண் என்ற ஐம்பூத உருவே, என்னுடைய ஊனும் உயிரும் உணர்வும் மாய எனதுள்ளத்தில் உறையும் பெருமானே, காத்தருள்க, எ. று.
தேனாகவும் இனிய அமுதமாகவும் சிந்திக்கும் உள்ளத்திற்கு இன்பந் தருதலின், “தேனே அமுதே” என்று கூறுகின்றார். “தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்” (ஏசறவு) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. கோன் - தலைவன். குரு - அறிவருள்பவன். தலைவனாய்ப் புறத்தே காவல் புரிவதும் குருவாய் அகத்தே இருள் நீக்கி அறிவொளி நல்குவதும் முருகன் செயலாதல் பற்றிக் “கோனே குருவே” என்று கூறுகின்றார். குணங்கள் சிறப்பதற்குக் குலம் இடமாதலால் இடமும் இடத்து நிகழ் பொருளுமாய் இயைதல் பற்றிக் “குலமே குணமே” என்று கூறுகின்றார். ஐம்பூதங்களின் உருவாய் விளங்குதலின் முருகப் பெருமானையே நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களாகக் காண்கின்றார். ஊனும் உயிரும் உணர்வும் என்ற மூன்றையும் உடம்பாக்கி அதன் உள்ளும் புறத்தும் உறைதலால் அவனை, “ஊனே உயிரே உணர்வே” என்றுரைக்கின்றார். இம்மூன்றால் அமைந்த உடம்பின் வேறாய் நில்லாது, உள்ளுறு பொருளாயும் ஒளிர்தலின் “உள்ளுறை வோனே” என மொழிகின்றார். “ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய், வானாய் நிலனானானய் கடலானாய் மலையானாய்” என நம்பியாரூரர், நவில்வது காண்க.
இதனால், முருகன் எல்லாமா யிருக்கும் இயல்பு கூறியவாறு. (11)
|