கட
கட்டளைக்
கலித்துறை
561. ஆறு முகங்கொண்ட ஐயாஎன் துன்பம் அனைத்துமின்னும்
ஏறு முகங்கொண்ட தல்லால் இறங்கு முகம்இலையால்
வீறு முகங்கொண்ட கைவேலின் வீரம் விளங்கஎன்னைச்
சீறு முகங்கொண்ட அத்துன்பம் ஓடச் செலுத்துகவே.
உரை: ஆறு முகங்களையுடைய ஐயனே, என் துன்ப மெல்லாம் இன்னும் மிகுகின்றனவே யன்றிக் குறைகின்றபாடில்லை. ஆதலால், ஒப்பற்ற நினது கையில் ஏந்தும் வேற் படையின் வீரம் விளக்கம் பெறுமாறு என்னைச் சீறி வருத்துகின்ற அத் துன்பங்கள் தாமே நீங்கிப் போகுமாறு செலுத்தி யருள்க, எ. று.
துன்பங்கள் தொடர்ந்து ஒன்றின் ஒன்று மிக்குத் தொடர்வது இயல்பாதலால், “துன்பம் அனைத்தும் இன்னும் ஏறுமுகங் கொண்டது” என்று கூறுகின்றார். கொண்டது, காலம் காட்டும் தொழில் பெயர். துன்ப மிகுதி நினைவில் நிற்பது போலக் குறைவு நினைவிற் பதிவதில்லை யாதலால், “இறங்கு முகம் இல்லையால்” என உரைக்கின்றார். வீறு முகம், சிறப்புறும் நிலைமை, வீரம் என்பது ஈண்டு வெற்றியின் மேற்று. “வீரம் என்னால் விளம்புந் தகையதோ” (பெரியபு) என்றாற் போல. நெஞ்சினைச் சுடும் இயல்பிற் றாதலின் துன்பத்தைச் “சீறுமுகங் கொண்ட அத்துன்பம்” என்று கூறுகின்றார்.
இதனால், வருத்துகின்ற துன்பங்களை ஒழித்தருளுக என வேண்டிக் கொண்டவாறாம். (12)
|