562. பண்கொண்ட சண்முகத் தையா அருள்மிகும் பன்னிரண்டு
கண்கொண்ட நீசற்றுங் கண்டிலை யோஎன் கவலைவெள்ளம்
திண்கொண்ட எட்டுத் திசைகொண்டு நீள்சத்த தீவுங்கொண்டு
மண்கொண்டு விண்கொண்டு பாதாளங் கொண்டு வளர்கின்றதே.
உரை: அழகிய முகங்கள் ஆறு கொண்ட ஐயனே, என் மனத்தின் கண் கவலை வடிவில் உண்டாகும் துன்பம் வன்மையான எட்டுத் திசையிலும் கடல் சூழ்ந்த ஏழு தீவுகளிலும் மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் பாதலத்திலும் பரந்து மேலும் விரிகின்றது; பன்னிரண்டு கண் படைத்த பெருமானாகிய நீ காணா தொழிந்தனையே, இதற்கு என் செய்வேன், எ. று.
பண்-அழகு. ஐயன்-தலைவன். துன்பத்திற்குக் காரணம் கவலையாதலின் கவலையை விதந்து கூறுகிறார். மாறா இயல்பின னென்றற்குத் “திண் கொண்ட எட்டுத்திசை” என்று கூறுகிறார். சத்த தீவு - சம்புத் தீவு முதலான ஏழு தீவுகள்.
இதனால், கவலை மிகுதி கூறித் திருவருள் நோக்கம் வேண்டியவாறாம். (13)
|