வண
வண்ண விருத்தம்
564. திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும்ஓர்
செவ்விய வேலோனே
குருமா மணியே குணமணி யேசுரர்
கோவே மேலோனே
கருமா மலம்அரு வண்ணம் தண்ணளி
கண்டே கொண்டேனே
கதியே பதியே கனநிதி யேகற்
கண்டே தண்டேனே
அருமா தவர்உயர் நெஞ்சம் விஞ்சிய
அண்ணா விண்ணவனே
அரசே அமுதே அறிவுரு வேமுரு
கையா மெய்யவனே
உருவா கியபவ பந்தம் சிந்திட
ஓதிய வேதியனே
ஒளியே வெளியே உலகமெ லாம்உடை
யோனே வானவனே.
உரை: திருமால் முதலிய தேவதேவர் உள்ளத்தே நினைந்து போற்றும் ஒப்பற்ற செம்மையான வேற்படைய யுடையவனே, ஞானாசிரியன்மார்களிற் சிறந்தவனே, உயர் குண முதல்வனே, தேவர்கட்குத் தலைவனே, யாவர்க்கும் மேலாய் விளங்குபவனே, எவ்வுயிர்க்கும் கதியாய் இருப்பவனே, தலைவனே, பெருஞ்செல்வமே, கற்கண்டு போல்பவனே, குளிர்ந்ததேனே, அரிய தவம்புரியும் நெஞ்சமுடையவர்க்கும் ஓங்கியுயர்ந்து எட்டமுடியாத தேவனே, அரசே, அமுதமே, ஞானமூர்த்தியே, இளந்தலைவனே, மெய்ப்பொருளே, மக்களுரு முதலிய பல வுருவங்களைக் கொடுக்கும் பிறவிப் பிணிப்பு நீங்கிக் கெட வேதங்களை ஓதிக் காட்டிய வேதியனே, ஒளிப்பொருளே, வெளியாக இருப்பவனே, உலகங்க ளெல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனே, வானத்தில் இருப்பவனே, பிறவிக்கு வித்தாகிய மலத்தின் தொடர்பு உயிர்களை விட்டு நீங்குமாறு தண்ணிய திருவருள் புரிவது கண்டுணர்ந்தே உன்னை முழு முதல் தலைமைப் பொருளாகக் கொண்டு வழிபடுகின்றேன், அருள் புரிக, எ. று.
முருகப் பெருமானது பரமாம் தன்மை கண்டு அச்சத்துடன் பரம் பொருள் முருக வுருவில் காட்சி தருகிற தென்றெண்ணி நீ யேந்தும் வேற்படையைப் பரவுகின்றார்கள் என்பார், “திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே” என அழைக்கின்றார். வேண்டுவார்க்கு இன்னருளும், வேண்டாது பகைத்தார்க்குத்தீங்கும் செய்வது பற்றி முருகனது வேற்படை, “செவ்விய வேல்” எனச் சிறப்பிக்கப்படுகிறது சிவபிரானுக்கே பிரணவப் பொருளை ஞான குரு வடிவல் இருந்து உரைத்தமை பற்றிக் “குருமா மணியே” என்கின்றார். உயர் குண முடையார் பலருள்ளும் உயர்ந்தோங்கி விளங்குகின்றமை தோன்றக் “குணமணியே” எனவும், தேவர்கள் பொருட்டு அவர்கட்குத் தளபதியாயிருந்து அசுரரோடு அறப்போர் நடத்தி வெற்றி கண்டதனால், “சுரர் கோவே எனவும், அதனால் முருகனது மேன்மை யாவரும் அறிய வெளிப் பட்டமையால், “மேலோனே” எனவும் விளம்புகின்றார். பிறப்பதும் இறப்பதும் புரியும் உயிர்கட்கு முடிவிடமாக இருப்பவனாதலின், “கதி” எனவும், அதற்குத் தலைவனாதலால், “பதியே” எனவும், வாழ்வளிப்பதால், “கனநிதியே” எனவும் புகழ்கின்றார். சிந்திக்கும் மனத்துக்குச் சிந்திக்குந் தோறும் இன்பம் தருவதால், “கற்கண்டே” என்றும், இன்ப நுகர்ச்சி தண்ணிய தேனாய் ஊறுதல் விளங்கத் “தண்டேனே” என்றும் கூறுகின்றார். திருவாசகம், சிவபெருமானைத் “தேனுந்து செந்தீ” (வெண்பா) என்றலின், இவர் முருகப் பெருமானைத் “தண்டேன்” என்று கூறுகின்றார். பிறர் செயற்கரிய தவத்தைச் செய்பவர் நெஞ்சம் உயர்வுடையதா மென்பது சொல்லாமலே யாவர்க்கும் தெரிவது பற்றி, “அருமாதவர் உயர் நெஞ்சம்” எனவும், அந் நெஞ்சினாலும் அணுகுதற்கரிய தேவன் எனற்கு, “விஞ்சிய அண்ணா விண்ணவனே” எனவும் இயம்புகிறார். அறிவுரு - ஞானமே வடிவாகியவன்; ஞானமூர்த்தி என்பதாம், “முருகையா” என்பதில் முருகு இளமையைக் குறித்தலில் இளந்தலைவா என்பது பொருளாயிற்று. அவன் திருவுருவ வகைகளில் உள்ளுறை மெய்ப்பொருளாதலின், “மெய்யவனே” என்று கூறுகின்றார். உருவாகிய பவ பந்தம் - மக்கள் உரு முதல் அணுவுருவரை அமைந்த பிறப்புக்களின் தொடர்பு. சிந்தல் - அழிதல். பிறப்பு இறப்புக்கள் அறவே இன்றிக் கெடுமாறு உண்மை ஞானப் பொருளை வேதங்களிலிருந்து வடித்தெடுத்து ஓதியவனாதலால், “உருவாகிய பவபந்தம் சிந்திட ஓதிய வேதியனே” என்று கூறுகின்றார். உலக மெலாம் படைத்தளித்துத் துடைக்கும் முதற்பொருள் அவனாகலான் அவற்கே, இவ்வுலகம் உடைமையாதல் விளங்க, “உலகமெலாம் உடையோனே” என்று கூறுகின்றார். வானவன் - வானுலகத்திலிருப்பவன். வானுலகம், மண்ணுக்கு மேலுள்ள விண்ணுலகத்துக்கு மேல் மேலாக அடுக்கிக் கூறப்படும் எல்லா வுலகங்களையும் தனக்குள் அடக்கி நிற்கும் சொல்லாகும். இவை யெல்லாவற்றிற்கும் மேலுள்ளவன் என்பது தோன்ற, “வானவன்” என்கின்றார். உலகில் உயிர்கள் பிறந்திறந்து உழலுதற்கு மூல காரணமாயிருப்பது அவற்றை அனாதியே பிணித்துள்ள மலமாதலின், அக் காரண மலத்தைக் “கருமாமலம்” என்றும், அதனா லுளதாகும் மறைப்பு நீங்கினாலன்றிப் பிறப்பறாமையின் இறைவன், உணர்வுப் பொருளாகிய உயிர் மலத்தின் நீங்கி உய்தி பெறும் பொருட்டு, அதன்பாற் கொண்ட பேரருளால் உருவைத் தரும் உடம்பும் அது நின்று வாழ்தற்குரிய உலகும் படைத்தருளினமையை அறிவாற் கண்டு முருகப் பெருமானை முதற்பொருளாகக் கொண்டேன் என்பார், “மலம் அறுவண்ணம் தண்ணளி கண்டே கொண்டேனே” என்று மொழிகின்றார். வேலோனே, குருமணியே குணமணியே, கோவே, மேலோனே, கதியே, பதியே, கனநிதியே, கற்கண்டே, தேனே, விண்ணவனே, அரசே, அமுதே, அறிவுருவே, முருகையனே, மெய்யவனே, வேதியனே, ஒளியே, வெளியே, உடையோனே, வானவனே, தண்ணளி கண்டு கொண்டேன் என முடிக்க.
இதனால், மலப் பிணிப்பால் செயலற் றிருக்க உயிர்கள் பால் பேரருள் கொண்டு, உலகில் வாழச் செய்கின்ற திறம் தெரிவித்தவாறாம். (15)
|