New Page 1

கொச்சகக் கலிப்பா

565.

    கூழுக் கழுவேனோ கோத்தணிகைக் கோவேயென்
    ஊழுக் கழுவேனோ ஓயாத் துயர்ப்பிறவி
    ஏழுக் கழுவேனோ என்செய்கேன் என்செய்கேன்
    பாழுக் கிறைத்தேன்ஈ துன்செயலோ பார்க்கும்இடம்.

உரை:

     தலைமை பெற்ற தணிகையில் எழுந்தருளும் அருளரசே, உண்ணும் கூழ் இல்லையே என்று அழுவேனா, அழச் செய்யும் என் ஊழ் வினையை நொந்து அழுவேனா, அவ்வினை காரணமாக இடையற வின்றித் துன்புறுத்தும் பிறவி வகை ஏழையும்நினைந்து அழுவேனா, யான் யாது செய்வேன்? இதுவரை என் காலத்தைப் பாழாக்கி விட்டேன்; எண்ணுமிடத்து இதுவும் உன் செயலாகுமோ என எண்ணுகிறேன், எ. று.

     மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்து பின்னர் வடகிழக்கு நோக்கி ஓடும் திருவேங்கட மலைத்தொடரில் தென்பாலில் சிதறித் தோன்றும் குன்றுகளில் தலையாயது பற்றித் தணிகை மலையைக் “கோத் தணிகை” என்று கூறுகின்றார். கூழ் என்பது தொடக்கத்தில் நிலத்தில் விளைவிக்கும் உண் பொருட்குப் பெயராயிருந்து, இப்பொழுது குழையச் சமைத்துண்ணும் உணவுக்குப் பெயராய் விட்டது. குழையச் சமைக்கப் படுவது கூழ். வேளை தோறும் வேண்டப்படுதலின் பெறு முயற்சி கருதிக் “கூழுக் கழுவேனோ” என்கின்றார். வருத்த மிகுதி அழுகையில் முடியும் என்க. வருந்தித்தான் பெறுதல் வேண்டும் என்ற சூழ்நிலை, பண்டை வினை காரணமாகத் தோன்றுதலின், “என் ஊழுக்கு அழுவேனோ” என்கின்றார். ஊழ் - பண்டை வினை. அஃதாவது, பயன் நுகரப் படாமல், நுகர்வித்தற்கு ஊழ்ந்திருப்பது பற்றி ஊழ்வினை எனப்படுகிறது. ஊழ்த்தல்-விளைதல், முதிர்தல். “இணரூழ்த்தும் நாறா மலரனையர்” (குறள்) என்பது காண்க. ஓயாத்துயர் - இடையறாத் துன்பம். பிறவி வகை ஏழு - ஊர்வன, பறப்பன, நீர் வாழ்வன, தாவரம், விலங்கு, மனிதர், தேவர் என்பன. அடுக்கு ஆற்றாமை தோன்ற நின்றது. அழுதல் பயனில் செயல் ஆயினமையின், “பாழுக்கிறைத்தேன்” என்று சொல்கின்றார். திருவாதவூரரும், “ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக்கிறைத்தேன்” (தோணோக்) எனக் கூறுவது காண்க. செய்வன எல்லாம் அருட் செயல் என நினைக்கும் சிந்தையாளர் ஆகலின், “ஈதுன் செயலோ பார்க்குமிடம்” என்று கூறுகின்றார். எச்ச வும்மை விகாரத்தால் தொக்கது. “வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே” (குழைத்த) என்பது திருவாசகம்.

     தனால், பிறப்பதும் துயர்ப்படுவதும் இறைவன் செயல் என்று எண்ணியவாறாம்.

     (16)