கட

கட்டளைக் கலிப்பா

566.

    சிந்தைக் கும்வழி இல்லைஉன் தன்மையைத்
        தெரிதற் கென்றும் திருத்தணி கேசனே
    உந்தைக் கும்வழி இல்லையென் றால்இந்த
        உலகில் யாவர் உனையன்றி நீர்மொள்ள
    மொந்தைக் கும்வழி இல்லை வரத்திரு
        முண்டைக் கும்வழி இல்லை அரையில்சாண்
    கந்தைக் கும்வழி யில்லை அரகர
        கஞ்சிக் கும்வழி இல்லையிங் கையனே.

உரை:

     திருத்தணிகைப் பெருமானே, நீர் முகந்து அருந்துதற்கு ஒரு மண்கலயமும் இல்லை; வாங்கி யுண்பதற்கு உரிய காசு நல்குதற்குத் திருமகளும் என்பால் வருதற்குரிய நல்வினையும் இல்லை; ஏதேனும் விற்றுண்ணலா மெனில் என் அரையில் ஒரு சாண் கந்தைத் துணியுமில்லை; பசிக்கு வயிற்றுக் கிடக் கஞ்சியும் கிடைக்கவில்லை. இங்ஙன மிருத்தலால், உன் தன்மையைச் சிறிதள வேனும் சிந்தித்துத் தெரிந்து கொள்ளச் சிந்தனைக்கும் இடமில்லை; உன் தந்தையாகிய சிவனுக்கும் எனக்கு உதவ வகை யில்லை யென்றால் இந்த உலகில் இவ்விடத்தில் அரகர, னுனக்குத் துணையாவார் உன்னை யன்றி யார்? கூறி யருள்க, எ. று.

     திருத்தணிகைப் பதிக்கு வள்ளற் பெருமான் சென்றிருந்த காலை தம்மை யறிந்தோர் யாரும் கட்புலப் படாமையால், வருத்தம் மிக்கு, முருகப் பெருமானிடம் முறையிடுகின்றவர், நீர் வேட்கை யுறுவது உணர்ந்து, நீர் முகந்து உண்பதற்கு முயன்றார்க்குக் கையிற் கலயம் ஒன்றும் இல்லாமை வருத்தம் தர, “நீர் மொள்ள மொந்தைக்கும் வழியில்லை” என்று வருந்துகிறார். அருகே, மண் பாத்திரக் கடை தோன்றக் கண்டு கலயம் ஒன்று வாங்கக் கையிற் காசு இல்லாமை நினைந்து துயரமும் வெகுளியும் சேரக் கொண்டு, “திருமுண்டைக்கும் வர வழியில்லை” என்று வைகிறார். நல்வினை யிருந்தாலன்றித் திருமகள் அருள் எய்தாதாகலின் வர வழியில்லை யென்று நொந்து கொள்கிறார். “புண்ணியம் உலர்ந்த பின் பொருளிலார்களைக் கண்ணிலன் நீங்கிடும் கணிகை வண்ணமே” (சூளாமணி) எனத் தோலாமொழித்தேவர் கூறுவது காண்க. முண்டை என்பது முண்டம் என்னும் நெற்றியைக் குறிக்கும் சொல்லடியாக வந்தது. “வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர்” (அன்னைப்) என்பது திருவாசகம். மங்கல மகளிரது திருநீறும் திலகமும் அணிந்த நெற்றியைத் திருமுண்டம் எனச் சிறப்பிப்பர். பிற்காலத்தே அச்சொல் மங்கலமிழந்த மகளிர்க்கு முண்டை யெனவும் திரிந்து வழங்குவதாயிற்று, இங்கே, திருமகள் மேலெழுந்த வெறுப்பினால் “திருமுண்டை” எனப் பழிக்கின்றார். திருமுண்டை - திருவாகிய முண்டை. கையில் ஒன்றும் இல்லாத போது உடுக்க உடையையோ மேலாடையையோ விற்றுண்ணும் மரபு பற்றி, அது செய்தற்கும் வழியில்லை யென்பார், “அரையில் சாண் கந்தைக்கும் வழியில்லை” என்று கூறுகின்றார். சாண் கந்தை - கோவணம். கஞ்சி - நீர் மிக்க கூழ். உண்ணும் உணவுக்கும் உடுக்கும் உடைக்கும் வழி யின்றித் துன்புறுகின்ற இவ்வருத்தம் ஏன் வந்தது எனத் தெரிந்து உன்பால் முறையிடலாம் எனில், சிந்தை யத்தனையும் வறுமையில் மடிந் தொழிந்தமையின், சிந்தனையூற்று வற்றி விட்டது என்பார், “சிந்தைக்கும் வழியில்லை” என்றும், “உன் தன்மையைத் தெரிதற்கு” என்றும் கூறுகின்றார். என்னும்- சிறிதும். உந்தை - உன் தந்தை. என் தந்தையே நஞ்சுணவும் தோலாடையும் உடையராதலின் எங்ஙனம் உதவுவார் என்பாயேல் என்பார், “உந்தைக்கும் வழியில்லை என்றால்” என்று கூறுகின்றார். “நஞ்சினை யுண்டிட்ட பேதைப் பெருமான்” (சோற்று) என நம்பியாரூரர் கூறுவது காண்க. மொந்தை - மண் கலயம்.

     இதனால், வறுமையால் வாடும் நெஞ்சம் சிந்தனை யூற்று வற்றிப் போதல் விளக்கியவாறாம்.

     (17)