New Page 1

நேரிசை வெண்பா

567.

    தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
    ஓதா தவமே யுழனெஞ்சே - மீதாத்
    ததிதி யெனமயிலிற் றானாடி நாளும்
    திதிதி தருந்தணிகைத் தே.

உரை:

     மேலிடத்தே யிருந்து ததா, திதி எனச் சதிபட ஆடும் மயில் மேலிவர்ந்து நடம் புரிந்து எப்பொழுதும் மெய்யன்பர்கட்கு முத்தி தருகின்ற தெய்வமாகிய முருகப் பெருமானுக்குரிய ஆறெழுத்தை ஓதாமல், வீணே வருந்துகின்ற நெஞ்சமே, அன்று பிரமன் தலையில் எழுதாக் குறையே துன்பத்துக்குக் காரணமாகும், இனி யென் செய்வது! எ. று.

     தரை யிடத்துக் காடுகளாயின் காப்புடைய இடங் கண்டும், மலைகளாயின் உயர்ந்தகன்ற கற்பாறை மேலும் தோகையை விரித்து இங்குமங்கும் திரிந்தாடுவது மயிற் கியல்பு ஆதலின், “மீதா” என்று கூறுகின்றார். மயில்களின் இயல்புகளை இவ்வுரைவேந்தர் ஐங்குறு நூற்று மஞ்ஞைப் பத்தின் முன்னுரையில் விரியக் கூறி யிருப்பது காண்க. தா ...... தத் ...... திதி என்பன நடனத்துக்குரிய சதி வகைகள். திதிதி - முத்தி. தே, ஈண்டு முருகப் பெருமானைக் குறித்தது. முருகனை வழிபடுகின்றவர் அவனுக்குரிய 'குமாராய நம' என்ற ஆறெழுத்தையும் மானதம், மந்தம், உரை என்ற மூவகையாலும் ஓதுப வாதலின், ஓதாமைக்கு வருந்தி, “ஓதாது அவமே உழல் நெஞ்சே” எனக் கூறுகின்றார். ஓதுவது இன்றியா தென உணர்ந்தும் ஓதாமல் ஒழிந்தமைக்குக் காரணம் காணலுற்று, இது பிரமன் தலையில் எழுதாக் குறை யென்று கண்டு, ஏழு 'தா' இட்டுக் குறைக்கு என்றும், இனி அதனை மாற்றி எழுதலாகாமையின், “என் செய்குதும் யாம்” என்றும் கூறுகின்றார்.

     இதனால், முருகனுக்குரிய ஆறெழுத்தை ஓதாமை அன்று பிரமன் தலையில் எழுதாமை போலும் எனச் சொல்லி வருந்தியவாறாம்.

     (18)