568. ஓரிரண்டாம் நற்றணிகை உத்தமன்றன் ஓங்கற்றோள்
தாரிரண்டார் போனின்ற தையன்மீர் - வாரிரண்டாத்
தொய்யி லழிக்குந் துணைமுலையா ளுள்ளகத்தா
மைய லழிக்கு மருந்து.
உரை: இருமருங்கும் இரண்டு தூசிப் படையினரை நிறுத்தினாற் போன்று நிற்கின்ற மகளிரே, வார் இரண்டணிந்து, எழுதிய தொய்யிலை அழித்துக் கொள்ளும் இரண்டாகிய கொங்கைகளை யுடைய இந் நங்கையின் உள்ளத்தில் தோன்றி யிருக்கும் காம மயக்கத்தை யழிக்கும் மருந்து, நல்ல தணிகை முருகனுடைய மலை போன்ற சிறந்த தோள்கள் இரண்டாம், எ. று.
தார்-தூசிப் படை. போரில் முற்படச் செல்லும் படை. ஈண்டு மன்மதன் விளைவிக்கும் காம்ப் போர்க்கு முற்படச் செல்லும் மகளிர் படை என்க. (vanguard of the army) “தாரிரண்டார்” என்பதனை இரண்டு தாரார் என மாறுக. தையல்-ஒப்பனை செய்து கொண்டிருப்பவள் வார்-கச்சு. முதற் கச்சுக்கு அடங்காமையின் மையல் விம்மிதத்தால் இரண்
டாவதும் கச்சணிந்தமை புலப்பட, “வாரிரண்டா” என மொழிகின்றார் இருமுறை கச்சு அணிந்தமையின் தொய்யில் அழிந்த தென்க. தொய்யில்-மார்பின் முற்றத்தில் சந்தனக் குழம்பால் எழுதப்படும் கோலம். கண்டு வணங்குவார்க்கு முருகனது திருவருட் செல்வத்தை வழங்கும் மலை யாதலின், “நற்றணிகை” என்கின்றார். ஓங்கல் தோள் - மலை போன்ற தோள்கள். ஆறுமுகமும் பன்னிரண்டு தோள்களுமுடைய கோலம் மண் மகளிர் உள்ளத்தே காதலுணர்வைத் தோற்றுவியா தாதலின், ஒருமுகமும் இரு தோளும் கொண்ட உருவத்தையே ஓதுகின்றார்.
இதனால் பெருந்திணை நங்கையின் காமக் கழிபடர் கண்டு பெருமுது பெண்டிர் கூறியவாறாம். (19)
|