569.

    ஏலுந் தயங்கென்னு மேவற் கெதிர்மறைதான்
    ஆலுந் தொழிற்கேவ லாகுமோ - மாலுந்தி
    மாற்றுந் தணிகையர்க்கு மாமயில்மேல் நாடோறுந்
    தோற்றுந் தணிகையன்பொற் றோள்.

உரை:

     மயக்கம் மிகுந்து உலகியற் பொருளில் கருத்தை மாற்றும் அன்பு குன்றிய செய்கை யுடையவர்க்கு, நாடோறும் பெரிய மயில் மேற் காட்சி தரும் தணிகை முருகப் பெருமானுடைய அழகிய தோள், ஏல், தயங்கு என்னும் ஏவல் வினைகட்கு எதிர்மறையாக வரும் வினை வகையில், ஏலாதே, தயங்காதே என ஏவல் எதிர் மறைப் பொருளதாகுமோ? எ. று.

     மால் - மயக்கம். உந்துதல் - மிகுதல். மாற்றும் தணிகையர் - உலகியலிற் செலுத்தி இறைவன் பால் அன்பு சுருக்கும் செயலுடையவர். தணிகையன் - தணிகை மலையை யுடையவன். கழற்றெதிய மறை.

     இதனால், தணிகைப் பெருமான் பால் அன்பு சுருங்கிய செய்வினை யுடையவர்க்கு அவன் தோள் பொருந்தாது என்றவாறாம்.

     (20)