57.

    செங்கையங் காந்த ளனையமின் னார்தம்
        திறத் துழன்றே
    வெங்கய முண்ட விளவாயினேன் விறல்
        வேலினையோர்
    அங்கையி லேந்திய ஐயா குறவர்
        அரிதிற் பெற்ற
    மங்கை மகிழும் தணிகேசனே யருள்
        வந்தெனக்கே.

உரை:

     குறவர் அருமையாகப் பெற்ற மங்கையாகிய வள்ளியைக் கூடி மகிழும் தணிகை மலைத் தலைவனே, வெற்றியே நல்கும் வேற்படையை ஒரு கையில் ஏந்திக் கொண்டிருக்கும் அழகனே, சிவந்த கைகள் செங்காந்தள் போன்ற மகளிர் உறவு கொண்டு யானை யுண்ட விளங்கனி போல் உள்ளீடின்றிக் கெட்டேனாதலின் என்பாற் போந்து அருள் புரிக, எ. று.

     தெய்வமாகிய முருகப் பெருமானை மணக்கும் திருவுடைய நங்கை எளிய குறவர் மகளாவ தெனின் அக்குறவர் செய்த தவமல்லது பிறிது காரணம் யாதும் இன்மை கருதி, வள்ளி நாயகியை, “குறவர் அரிதிற் பெற்ற மங்கை” என்று குறிக்கின்றார். வள்ளி நாயகியின் பிறப்பு நோக்காது பெண்மை நலமே பேணிய பெருந்தகைமயை வியந்துரைக்கின்றாராதலால், குறவர் பெற்ற “மங்கை மகிழும் தணிகேசனே” என்று பரவுகின்றார். வேலேந்திய இளமைத் தோற்றம் கண் கவர் வனப்புடன் விளங்குதல் பற்றி, “விறல் வேலினை ஓர் அங்கையில் ஏந்திய ஐயா” என்று கூறுகின்றார். ஐயன் - அழகன்; தலைவனுமாம். மகளிர் செங்கைக்குக் செங்காந்தளை உவமம் கூறுவது மரபு. மின்னற் கொடி போலும் சிற்றிடை யுடைமை பற்றி இளமகளிரை “மின்னார்” என்பதும் வழக்கு. மகளிர் கூட்டுறவால் உள்ளத்தே பத்தி நலம் இல்லாதொழிந்தமை புலப்பட, “வெங்கயம் உண்ட விளவாயினே” னென விளம்புகின்றார். யானைத் தீ என்னும் நோயுற்ற வழி, விளம்பழம் பெறும் தோடு மூடித் தோன்றும் என்பர். “வெஞ்சின வேழமுண்ட வெள்ளிலின் வெறியமாக, நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி” (சீவக. 1024) என்று திருத்தக்க தேவர் கூறுவதும், இதற்கு உரை கண்ட நச்சினார்க்கினியர், “வேழம், தேரை போயிற் றென்றாற் போல்வதொரு நோய்” என்பதும் இங்கே நினைக்கத் தகுவனவாம்.

     இதனால், என்பாற் பத்தி நலம் இல்லா தொழியினும் ஆண்டருள்க என வேண்டியவாறாம்.

     (57)