570.

    நின்னிலையை என்னருளால் நீயுணர்ந்து நின்றடங்கின்
    என்னிலையை அந்நிலையே எய்துதிகாண் - முன்னிலையை
    இற்குருவி னாட்டாதே என்றுரைத்தான் ஏரகம்வாழ்
    சற்குருஎன் சாமிநா தன்.

உரை:

     திருவேரகம் என்னும் சுவாமி மலையில் எழுந்தருள்கின்ற சற்குருவாகிய என் சாமிநாதப் பெருமான் என்னுடைய திருவருள் ஞானத்தால் உன்னுடைய நிலைமையை உணர்ந்து கொண்டு உனக்குள்ளே அடங்கி நோக்குவையேல் என்னுடைய உண்மை நிலையை, நோக்கிய அப்பொழுதே அடைகுவாய்; உனக்கு முன்னே நிற்கும் உருவாந்தன்மை யில்லாத உருவைக் குரு என்று கருதாதே என்று உரைத்தருளினான். எ. று.

     தன்னை யறிதலும், தன்னை யுடைய தலைவனை யறிதலும், திருவருள் ஞானத்தாலன்றி இல்லாமையால், “என்னருளால் நின்னிலையை நீயுணர்க” என்றும், உணர்ந்த விடத்து என்னை யுணர்ந்து என்னை யறியும் அறிவின்கண் எனது இயல்பினை யறியலாம் என்பார் “உணர்ந்து நின்று அடங்கின்” என்றும் கூறுகின்றார். எனது இயல்பினை யறிந்த அப் பொழுதே, உண்மை ஞானம் தலைப்படுதலால் எனக்குரிய ஞானப் பெருநிலையை நீ யடைவாய் என்பார், “என்னிலையை அந்நிலையே எய்துதி காண்” என்று உரைக்கின்றார். படர்க்கை நிலையில் மக்களில் ஒருவனை அதிட்டித்து உரைத்தலால், அவன் குருவாக மாட்டான் என்பது பற்றி, “முன்நிலையை இற்குருவின் நாட்டாதே” என்று அறிவுறுத்துகின்றார். இற்குரு குருவாம் தன்மை இல்லாதவன். நாட்டுவது இருக்கையிலிருந்து அறிவுரை வழங்கும் ஆசிரியன் தன்மையை இருக்கைக்கே ஏற்றுவது போலாம். புள்ளிருக்கு வேளூர்க்குச் சென்றிருந்த வள்ளற்பெருமான், சுவாமி மலைக்குச் சென்று முருகப்பெருமானைக் கண்ணார்க் கண்டு வழி பட்டு வந்தாராகக் குரு தரிசனம் எப்படி என்று வினாவிய உலகநாதத் தம்பிரான் சுவாமிகட்கு விடை யாகத் தந்த வெண்பா இது என்பர்.

     (21)