1. கருணை விண்ணப்பம்

        அஃதாவது கருணை செய்தல் வேண்டுமென முறையிடுவது. இதன்கண் வரும் பாட்டுக்களில், கருணை பெறற்கு ஏற்ற உரிமையும் தன்மையும் தம்பால் இருப்பதைப் பொருந்திய முறையில் வள்ளற் பெருமான் எடுத்துரைப்பது கற்றோர்க்கு இனிய விருந்து செய்கிறது. இதன்கண் பிழை பொறுக்குமாறு நான்கு பாட்டுக்களும், தொண்டு பொருளாக இரண்டு பாட்டுக்களும், ஞானமும் இன்பமும் பற்றி நான்கு பாட்டுக்களும் அந்தாதித் தொடையில் அமைந்திருக்கின்றன. முதல் திருமுறையில் திருத்தணிகையிலும், புள்ளிருக்கு வேளூரிலும், திருவேரகத்திலும் எழுந்தருளும் முருகப் பெருமானைப் பாடிப் பரவிய வள்ளற் பெருமான், இவ் விண்ணப்பத்தில் சிவபரம்பொருளைப் பொதுவகையில் வைத்துப் பாடிப் பரவுகின்றார்.

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

571.

     நல்லார்க் கெல்லாம் நல்லவன் நீ
          ஒருவன் யாண்டும் நாயடியேன்
     பொல்லார்க் கெல்லாம் பொல்லவன் நான்
          ஒருவன் இந்தப் புணர்ப்பதனால்
     எல்லாம் உடையாய் நினக்கெதிரென்
          றெண்ணேல் உறவென் றெண்ணுகஈ
     தல்லால் வழக்கென் இருமைக்கும்
          பொதுமை அன்றோ அருளிடமே.

உரை:

     எல்லா முடைய பெருமானே, நற்பண்புடையவர் எல்லார்க்கும் நீ ஒருவனே நன்மையால் தலையாயவன்; நாயாய்க் கடைப்பட்ட அடியனாகிய யான் பொல்லாச் செயலுடையவர் எல்லாரிலும் எக்காலத்தும் பொல்லாங்கே செய்யும் பொல்லாத ஒருவன் ஆவன்; இந்த இயைபினால், நினக்கு நேர் மாறானவன் என நினைக்காமல் என்னையும் ஓர் உறவினன் எனத் திருவுளம் கொண்டருள வேண்டுகிறேன்; திருவருள் புரியும் நிலையும் நன்மை தீமை இரண்டிற்கும் பொதுவாதலால், இருவரிடையே இது தவிர வழக்கு யாது? எ.று.

     நல்லதன் நலம் கண்டு பாராட்டி ஏற்பதற்கும் தீயதன் தீமை கண்டு வெறுத்து விலக்குவதற்கும் “ஒப்ப நாடி அத்தக”ச் செயல்படுவது நீதி நிலையமாகிய பொதுமன்றம். நல்லது புரியும் நல்லோரும் தீயது செய்யும் தீயவரும் நீதி வேண்டி அப் பொது மன்றத்தைத் தானே நாடி வருவது இயல்பு என்பார், “இருமைக்கும் பொதுமை யன்றோ அருளிடமே” என வுரைக்கின்றார். கொள்ளுதலும் தள்ளுதலும் செய்யும் பொது நிலையத்தில் தலைவனாவான் நீதியே யுருவினனாயினும், அவன் சொல்லும் செயலும் திருவருள் வடிவே யாதலால், அப் பொதுவிடம் அருணிலையமாம் என்பாராய், “அருளிடம்” எனச் சிறப்பிக்கின்றார். அருளிடமாகாவிடின் நல்லவர் தீயவர் என்ற இருசாராரும் உள்ளதன் உண்மை கூற அஞ்சுவர் என்க. “நீதி பலவும் தன்ன வுருவா மென மிகுத்ததவன்” (வைகா) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. அறக் கருணையும் மறக்கருணையும் கொண்டு நல்லாரை யளித்தலும் தீயாரைத் தெறுதலுமாகிய எல்லாச் செயலும் உடையவன் நீயே என்பாராய், “எல்லாம் உடையாய்” எனப் பரவுகின்றார். “பரவுவாரையும் உடையார், பழித்து இகழ்வாரையும் உடையார்” (வாழ்கொளி) எனத் திருஞான சம்பந்தர் தெரிவிப்பது காண்க. பொல்லார்க்கு நல்லவரின் நன்மை தெரியாதே யன்றி, நல்லார்க்கு நல்லவரின் நயமும் தீயவரின் தீமையும் இனிது விளங்கத் தெரியுமாயினும், கண்ட தீமையை எடுத்துரைத்துத் தூற்றுதல் செய்யார்; நலமே பாராட்டுவர்; அவரிடையே நன்மைப் பண்பால் உயர்வற உயர்ந்தவன் என்பாராய், “நல்லார்க் கெல்லாம் நல்லவன் நீ” எனவும், யானோ, பொல்லாங்கு இல்லெனினும் உளதாகப் படைத்துப் பறையறைந்து பலரும் கண்டு வெறுத்து ஒதுக்கத் தக்க கீழ்மைத் தன்மை யுடைமையால், நாயினும் கீழ்ப்பட்ட பொல்லாப் பண்புடையேன்; பொல்லாதவருள் எனக்கு நிகர் யானே என்பாராய், “நாயடியேன் பொல்லார்க் கெல்லாம் பொல்லவன் நான் ஒருவன்” என்கின்றார். அடியேன் - கீழ்க் கீழ் அடியிலிருப்பவன். “யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான், யாவர்க்கும் கீழாம் அடியேன்” (வெண்பா) என்று மாணிக்கவாசகர் உரைப்பது காண்க. உயர்வின் மறுதலை தாழ்வு. உயர்வுக்கு எல்லை நீ யாதல் போலத் தாழ்வுக்கு எல்லை நான்; இவ்வியைபு நோக்கி என்னை நினக்கு எதிர் மறுதலைப் பட்டவன் எனத் திருவுள்ளத்தில் கருதுதல் கூடாது என முறையிடுவாராய், “இப்புணர்ப்பினால் நினக்கு எதிர் என்று எண்ணேல்” என வேண்டுகிறார். மக்களாட்சி மன்றத்தில் ஆளுங் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர்க்கு ஆள்பவர் கட்சித் தலைவர்க்கொப்பத் தலைவர் என்ற புணர்ப்பு நோக்கிச் சம மதிப்பளிப்பது முறை யென்பர்; மாறானவராகக் கருதலாகா தென்பது கருத்து. அக் கருத்தே இம் முறையீட்டில் அமைந்திருப்பது நோக்கத்தக்கது. புணர்ப்பு, ஈண்டு இயைபு குறித்து நின்றது. நாயடியேன் என்பது, இங்கே நாயினும் கீழ்ப்பட்டவன் என்னும் பொருள்பட நின்றது.

     இதனால் தீமையே உருவா யமைந்து கீழ்ப்பட்டேனாயினும் என்னை வெறுத்துப் புறக்கணிக்கத் தக்கவனாக மதித்துப் புறம் போக்க லாகாது என வேண்டிக் கொண்டவாறாம்.

     (1)