572.

     இடமே பொருளே ஏவலே
          என்றென் றெண்ணி இடர்ப்படுமோர்
     மடமே உடையேன் தனக்கருள் நீ
          வழங்கல் அழகோ ஆநந்த
     நடமே உடையோய் நினைஅன்றி
          வேற்றுத் தெய்வம் நயவேற்குத்
     திடமே அருள்தான் வழங்காது
          தீர்த்தல் அழகோ தெரிப்பாயே.

உரை:

     அம்பலத்தில் இன்ப நடம் புரியும் பெருமானே, இடம் நாடியும் பொருள் தேடியும் ஏவலாள் வேண்டியும் பலகால் எண்ணித் துன்பப் படுவதற்கு ஏதுவாகிய மடமையை யுடைய எனக்கு, நீ யருள் செய்வது அழகன்றாயினும், உன்னையன்றி வேறு தெய்வங்கள் விரும்பாத எனக்கு, அவ்விரும்பாமைக்கண் நிற்றற்குரிய மனத் திட்பத்தை நல்காமல் விடுவது அழகாகுமா? தெரிவித்தருள்க. எ.று.

     இடமாவது, தூய காற்றும் ஒளியும் நீர்நலமும் பரப்பும் வாய்ப்ப அமைந்த இருப்பிடம். பொருளாவது, தாம் பிறரை இரவாது, தம்மை யிரந்த பிறர்க்கு உதவும் அளவாய பொருள். ஏவலாவது குறிப்பறிந்து ஏவின செய்யும் பணிமக்கள். இவை யெண்ணியாங்குக் கிடைப்பதும், ஒன்று கிடைப்பின் ஏனையவை கிடையா தொழிவதும் கவலை மிகுவித்து மனத் திண்மையைக் கரைப்பன வாதலின், “இடமே பொருளே ஏவலே யென்றென் றெண்ணி யிடர்ப்படும்” என்றும், இவ்விடர்ப்பாட்டிற்குக் காரணம் உலகியல்பு அறியாமை என விளக்குதற்கு, “ஓர் மடமை” என்றும், அதனைத் தான் கொண்டு நிற்பதைக் காட்டற்கு “உடையேன்” என்றும் உரைக்கின்றார். கணந்தோறும் மாறும் இயல்பினதாகலின், முற்றவும் அறியும் இயல்பினதன்று உலகியல்பு என்று அறியா தொழிந்தமைக்கு இரங்கி, நீ அருள்கின்றாய் ஆயினும், அறியாமைக்கு அஃது ஆக்கம் தரும் செயலாய் நினது அருட் பண்பிற்கு அழகு தருமோ என அஞ்சுகின்றேன் என்பார். “அருள் நீ வழங்கல் அழகோ” என இயம்புகின்றார். இடம் முதலியன பற்றிப் பன்முறையும் பலகாலும் எண்ணி, மனவன்மை குன்றிய எனக்குப் பிற தெய்வங்களை எண்ணுதற்கிடந் தராத திண்மை வேண்டுமாதலின், அதனை யருளுவது நினது பேரருட்குச் சிறப்பாம் என்பார். “நினை அன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத் திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ” என்கின்றார். திடம்-மனத்திட்பம். “வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்” (661) என்பர் திருவள்ளுவர். அறிவாலும், வாழ்க்கைச் சூழ்நிலையாலும் திருவருளாலும் பெறக் கடவதாகலின் “திடம் அருளுக” என்கின்றார். தீர்த்தல் - விடுதல். “தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்” என்பது தொல்காப்பியம். இத் திருவருளால் எய்திய திண்மையாற்றான், “உள்ளேன் பிற தெய்வம் உன்னை யல்லா தெங்கள் உத்தமனே” (சதக) என்று திருவாதவூரரும் கூறுகின்றார்.

     இதனால், பிற தெய்வங்களை நினையாத மனத்திண்மையை யருளுமாறு வற்புறுத்தியவாறாம்.

     (2)