574.

     அருள்ஓர் சிறிதும் உதவுகிலாய்
          அதனைப் பெறுதற் கடியேன்பால்
     தெருள்ஓர் சிறிதும் இலையேஎன்
          செய்கேன் எங்கள் சிவனேயோ
     மருளோர் எனினும் தமைநோக்கி
          வந்தார்க் களித்தல் வழக்கன்றோ
     பொருளோர் இடத்தே மிடிகொண்டோர்
          புகுதல் இன்று புதிதன்றே.

உரை:

     எங்கள் சிவபெருமானே, எனக்கு நீ சிறிதும் அருள் புரிகின்றாயில்லை. நி்னது அருளைப் பெறுதற்கு அடியவனாகிய என்னிடத்தில் ஞானமும் சிறிதும் இல்லையே! இதற்கு என் செய்வேன்? அறியாமையால் மருள் நிறைந்த மனமுடையவராயினும் தம்மை நோக்கி வந்தாரேல் அவர்க்கு ஏதேனும் உதவுவது உலகில் செல்வர்க்கு வழக்கமாகும். பொருளுடையவர்களிடத்தே வறுமை யுற்றோர் பொருள் வேண்டிச் செல்வது இந்நாளிலும் புதுமையன்று. எ. று.

     அறிவில்லாதவிடத்து மருட்சி யுளதாதல் இயல்பாதல் கண்டு ஈயாத மனமுடையவரும் இரக்கமுற்று ஏதேனும் ஒன்று ஈந்து விடுவது உலகில் எங்கும் காணும் இயற்கை. அதனால் “மருளோர் எனினும் தமை நோக்கி வந்தார்க்கு அளித்தல் வழக்கு” என்றும், இல்லாமையால் இரப்பவர் பொருளுடையோரையே நோக்கிச் செல்வது நாளும் காணப்படும் நிகழ்ச்சி யாதலால், “பொருளோரிடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிதன்று” என்றும் கூறுகின்றார். அறிவில்லார்க்கு மனத்தின்கண் காணப்படுவன பலவும் புதுமை தோற்றுவித்து மருட்கையை வெளிப்படுத்தலின் அவர்களை “மருளோர்” என்கின்றார். உடையவர் வறியவர் என்ற வேறுபாடின்றி மருளோர்க்கு ஈவதில் ஒத்தியல்வதால் ஈவாரைக் கூறிற்றிலர். தம்மை நோக்கி வாராதவர்க்குச் சென்றளிப்பது உலகத்து வழக்கின்மையின், “தமை நோக்கி வந்தார்க் களித்தல் வழக்கு” என்று கூறுகின்றார். பொருளோர் - பொருளுடையவர். மிடி - வறுமை; இல்லாமை. இன்று என்பதன் ஈற்றில் எச்சவும்மை தொக்கது. தெருள் - கல்வி கேள்விகளோடு உண்மை யறிவால் உளதாகும் தெளிவு. தெளிந்த சிந்தை யுடையவர்க்குத் திருவருள் ஞானம் எய்துவதன்றிப் பிறர்க்கு எய்துதல் அரிது என்பது பற்றி “அடியேன் பால் தெருள்ஓர் சிறிதும் இல்லை” என்று சொல்கின்றார். திருவருள் ஞானமாவது சிவஞானம். கல்வி கேள்விகளால் உளதாவது பாசஞான மென்றும், உண்மை ஞானத்தைப் பசுஞான மென்றும், திருவருள் ஞானத்தைப் பதிஞான மென்றும் சைவ நூல்கள் கூறுவதால், பசுபாச ஞானங்களால் தெளிவுறாத எனக்குப் பதிஞானம் எய்துதற்கு வழியில்லையே என்பார், “என் செய்கேன்” என்று வருந்துகிறார். “பாசமா ஞானத்தாலும் படர்பசு ஞானத்தாலும் ஈசனை யுணர வொண்ணாது” என்றும், அருள் ஞானம் ஒன்றுதான் ஈசனை அடைவிக்கும் என்பது பற்றி, “இறையருள் ஞானம் நண்ணித் தேசுறும்” (சிவப். 84) என்றும் பெரியோர் கூறுவதால், “அருளோர் சிறிதும் உதவுகிலாய்” என்று உரைக்கின்றார்.

     இதனால், திருவருள் ஞானம் நல்குதல் வேண்டும் என விண்ணப்பித்தவாறாம்.

     (4)