575. புதியேன் அல்லேன் நின்அடிமைப்
பொருத்தம் இல்லேன் அல்லேன்யான்
மதியேன் வேற்றுத் தேவர்தமை
வந்தங் கவர்தாம் எதிர்ப்படினும்
துதியேன் நின்னை விடுவேனோ
தொண்ட னேனை விடல்அழகோ
நதியேர் சடையோய் இன்னருள் நீ
நல்கல் வேண்டும் நாயேற்கே.
உரை: கங்கை தங்கிய சடையோனாகிய நீ, நாயேனுக்கு நின் திருவருள் ஞானத்தை நல்க வேண்டுகின்றேனாக, யான் நினக்குப் புதியவனும் அல்லேன்; நின்னுடைய திருவடித் தொண்டுக்குப் பொருத்தமில்லாதவனும் அல்லேன்; நின்னை யொழிந்த வேறு தெய்வங்களை நான் பொருளாக மதிப்பவனும் அல்லேன்; அத் தெய்வங்கள் தாமே என் கண் முன்னே வந்து நிற்பினும் நான் வணங்கி வழிபட மாட்டேன். அதே நிலையில் உன்னை நினையாது விடவும் மாட்டேன்; இந்நிலையில் என்னைக் கைவிடுதல் அழகாகாது. எ.று.
நதியேர் சடை - நதி தங்கிய சடை. இன்னருள் - சிவஞானம். “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்” (பெரிய பு.) எனினும் அமையும். வழி வழியாக வந்த தொழும்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பார் “புதியேன் அல்லேன்” எனவும், முன்னைப் பிறவியிற் புரிந்த அடித்தொண்டின் பயிற்சியால் இப் பிறவியிலும் அதனைத் தொடர்ந்து செய்தற்குரிய தகுதியுடையேன் என வற்புறுத்தற்கு எதிர்மறை வாய்பாட்டால், “நின் அடிமைப் பொருத்தம் இல்லேன்; அல்லேன்” எனவும் உரைக்கின்றார். அடிமை யென்றவிடத்து ‘கு’வ் வுருபு தொக்கது. “பண்டடித் தவத்தால் பயில்வால் தொழும் தொண்டருக் கெளியாய்” (ஆலவாய்) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க. வழி வழித் தவத்தால் எய்திய மனத்திண்மையால் பிற தெய்வங்களைப் பொருளாகக் கருதேன் என யாப்புறுத்தற்கு, “வேற்றுத் தேவர்தமை யான் மதியேன்” எனவும், அவர் தாமே உவந்து என் கண்காண நேர் நிற்பராயினும் தேவர் என்பதுபற்றியும் வணங்குதல் செய்யேன் என்பாராய், “அவர் தாம் வந்து அங்கு எதிர்ப்படினும் துதியேன்” எனவும் கூறுகின்றார். மதித்தல், மனத்தால் உயர்வாக எண்ணுதல். மதியாமை நோக்கி என்னை நீ விடினும் யான் உன்னை விடேன் என்றற்கு, “நின்னை விடுவேனோ” என்றும், இவ் வகையில் என்னை நின்பாற் பிணிப்பது நினக்குச் செய்யும் அருள் தொண்டே யாதலால், என்னைக் கைவிடல் அழகாகாது என்பாராய்த் “தொண்டனேனை விடல் அழகோ” என்றும் உரைக்கின்றார்.
இதனால், தொண்டு புரிவதில் பெரு விருப்புடைய என்னைக் கைவிட வேண்டா என விண்ணப்பித்தவாறாம். (5)
|