576.

     நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து
          நலிதல் அழகோ நல்லோர்க்கிங்
     கீயேன் ஒன்றும் இல்லேன் நான்
          என்செய் கேனோ என்னுடைய
     தாயே அனையாய் சிறிதென்மேல்
          தயவு புரிந்தால் ஆகாதோ
     சேயேன் தன்னை விடுப்பாயோ
          விடுத்தால் உலகஞ் சிரியாதோ.

உரை:

     எனக்குத் தாய் போன்றவனே, என்பால் நல்லோர் வரின், அவர்க்கு இங்கு ஒன்றும் கொடுக்க வல்லமை யில்லாதவனாக இருக்கின்றேன்; அதற்குக் காரணம் காணின், கையில் ஒன்றும் இல்லாதவனாக வுள்ளேன்; இவ்வாற்றால் நாயேன் துன்பமாகிய கடலில் ஆழ்ந்து வருந்துவது அழகாகுமா; எனக்கு நீ சிறிது அருள் புரிவாயாயின் அஃது உன் பெருந் தன்மைக்கு மாறாவதோ; சேயனாகிய என்னைக் கைவிட்டு விடுவாயோ; அப்படி விடுத்தால் உலகம் நகைக்காதோ? எ.று.

     உலகங்களை நின்று நிலவச் செய்தலால் “தாயே யனையாய்” என்று சாற்றுகின்றார். “தாயாகிய உலகங்களை நிலைபேறு செய் தலைவன்” (நெய்த்தா) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. கீழ்ப் பட்டவன் என்பதற்கு “நாயேன்” எனத் தன்னைச் சொல்லிக் கொள்கின்றார். குணச் செயல்களால் நற்பண்புடையோர்வரின், வெறிது வரவேற்றலும் செலவிடுதலும் நற்பாங் கன்மையின், கையில் ஒன்று மின்மை நினைத்து வருந்துகின்றாராதலின், “நல்லோர்க் கிங்கொன்றும் ஈயேன்; இல்லேன்” எனவும், “என் செய்கேனோ” எனவும் கூறுகின்றார். “ஈதல் இயையாக் கடைச் சாதல் இனிது” எனத் திருவள்ளுவர் ஈதலை வற்புறுத்துமாறு காண்க. உனது திருவருள் புரிவாயாயின் இத் துன்பத்துக்கு உள்ளாகேன் என்றும், அருள் புரியாமையின் மிகவும் துன்புறுகின்றேன் என்றும் முறையிடுவார். “நாயேன் துன்பக் கடலில் வீழ்ந்து நலிதல் அழகோ” எனவும், ஒருகால் அருள் புரிவையேல் உனக்கு அதனால் குறை யுண்டாகுமோ வென்று கேட்பாராய், “என்மேல் சிறிது தயவு புரிந்தா லாகாதோ” எனவும் இயம்புகின்றார். நினது திருவருள் எனக்கு எய்தாவிடின், அஃது என்னைக் கைவிடுவது போலாகும் என்பார், “சேயேன் தன்னை விடுப்பாயோ” என்றும் அங்ஙனம் கைவிடுவாயாயின், உனக்கு அடிமை எனப்படும் என்னையும் ஆண்டவன் எனப்படும் உன்னையும் உலகம் கண்டு எள்ளி நகைக்குமே என்று எண்ணி அஞ்சுகின்றேன் என்பாராய், “விடுத்தால் உலகம் சிரியாதோ” என்றும் இறைஞ்சுகின்றார். ‘தெருளார் கூட்டங்காட்டாயேற் செத்தே போனாற் சிரியாரோ’ என்பது திருவாசகம். சேயேன் - மகனாகிய யான்; சேய்மையிலிருக்கும் யான்.

           இதனால், நல்லோர்க்கு ஈத்துச் சிறப்பிப்பதற்கு இல்லாமை தடையாவது முறையிட்டவாறு.

     (6)