577.

     சிரிப்பார் நின்பேர் அருள்பெற்றோர்
          சிவனே சிவனே சிவனேயோ
     விரிப்பார் பழிச்சொல் அன்றிஎனை
          விட்டால் வெள்ளை விடையோனே
     தரிப்பாய் இவனை அருளிடத்தே
          என்று நின்று தகும்வண்ணம்
     தெரிப்பார் நினக்கும் எவர்கண்டாய்
          தேவர் தேடற் கரியானே.

உரை:

     சிவபெருமானே, வெள்ளை நிற விடை யேறுபவனே, தேவர்கள் அடி முடி தேடிக் காண்பதற்கு அரியவனே, என்னை அருள் செய்யாது புறக்கணித்து விட்டால், உன்மேல் பழிப்புரைகளை நாடெங்கும் பரவ விரித்துரைப்பதோடு, நின்னுடைய பேரருளைப் பெற்ற பெருமக்கள் என்னைக் கண்டு சிரிப்பார்களே; நின்னுடைய திருமுன் நின்று இவன்பால் அருள் செய்க; இவன் அது பெறுதற்குத் தக்கவன் என்று நினக்குத் தக்கவாறு எடுத்துரைப்பவர் யாவர் இருக்கின்றார்கள்? எ.று.

     அருட் கடலாகிய சிவபெருமான் தனது திருவருளைச் செய்யாதுவிடின், தாம் எய்தவிருக்கும் அவல நிலையை எண்ணி மனம் வருந்துகின்றா ராதலால், “எனை விட்டால்” என்றும், நினது பேரருளைப் பெற்ற பெரியோர்க்கு அது பெரு நகைப்புக்கு இடமாம் என்று அயர்கின்றமை தோன்ற, “சிரிப்பார் நின்பேர் அருள் பெற்றோர்” என்றும், அவ்விகழ்ச்சியைப் பொறுக்க மாட்டாமை புலப்பட, “சிவனே சிவனே சிவனேயோ” என்றும் ஓலமிட்டு உரைக்கின்றார். என்னை இகழ்வது ஒரு பொருளாகா தொழியினும் அருள் வள்ளலாயிருந்தும் எளியோரிடத்து இப் பெருமானுக்கு இரக்கமில்லை என்று நாடெங்கும் அறியப் பழிப்புரைகளைச் சொல்லிப் பரப்புவர் என்று அஞ்சுகிறேன் என்பாராய், “பழிச் சொல் விரிப்பார்” என்று விளம்புகிறார். மேலும் தொடர்ந்து பேசுகின்றாதலின், “அன்றி” என்கின்றார். “அன்றி” என்பதற்கு நின் கருத்தறியாது மாறுபட்டுப் பழிப்பதும் சிரிப்பதும் செய்கின்றார்கள் எனப் பொருளுரைத்தலும் உண்டு. அன்றுதல் - மாறுபடுதல். அருள் பெற்ற பெருமக்களின் திருவுள்ளம் இரக்கமிக்க தாதலின் அவ்வாறு இகழார் என்றோர் எண்ணம் உடன் தோன்றுதலின், அப் பெற்றியோர் அவர் பக்கல் உளராயின் முன்னரே எனக்கு அருள் செய்யுமாறு மொழிந்திருப்பரே, அவர்கள் அங்கே இல்லை போலும், வேறே அப்பெருமான் பக்கல் சென்று என் நிலைமையை எடுத்துக்காட்டி ‘இவன் நினது பேரருள் பெறுதற்குரியவன்’ என்று பேசி எல்லாமறிந்த நினக்கும் தக்க வண்ணம் எடுத்துரைத்து நினது திருவருளை நல்குவிப்பவர் நின் பக்கல்யாவர் இருக்கின்றார்கள்? என்பாராய், “அருளிடத்தே இவனைத்தரிப்பாய் என்று நின்று தகும் வண்ணம் நினக்குத் தெரிப்பார் எவர்” என்று கூறுகின்றார். கண்டாய், முன்னிலை அசை. திருமால் வெள்ளை எருதின் உருக்கொண்டு சிவனுக்கு ஊர்தியானது பற்றி “வெள்ளை விடையோனே” எனவும், அயனும் திருமாலும் சிவனுடைய முடியும் அடியும் முறையே தேட முயன்று காண மாட்டாராயினர் என்ற வரலாறு பற்றி, “தேவர் தேடற் கரியானே” எனவும் சிறப்பிக்கின்றார். “தடமதில்கள் அவை மூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண்” (சாழல்) எனத் திருவாசகம் ஓதுவது காண்க.

     இதனால், திருவருள் எய்தாவிடில் தமக்கு வரும் அவல நிலையை எண்ணிச் சொல்லி வருந்தியவாறாம்.

     (7)