578. அரிய பெருமான் எளியோமை
ஆளும் பெருமான் யாவர்கட்கும்
பெரிய பெருமான் சிவபெருமான்
பித்தப் பெருமான் என்றுன்னை
உரிய பெருமா தவர்பழிச்சல்
உண்மை எனில்என் உடையானே
கரிய பெருமால் உடையேற்கும்
அருளல் உன்றன் கடன்அன்றே.
உரை: என்னையுடைய பெருமானே, அரிய பெருமான் எனவும், எளியவர்களாகிய எங்களை ஆண்டருளும் பெருமான் எனவும், யாவர்க்கும் பெரிய பெருமான் எனவும், சிவபெருமான் எனவும், பித்தப் பெருமான் எனவும் உன்னை வாழ்த்துதற்குரிய பெருமை சான்ற மாதவத்தர்கள் பராவுவது உண்மை எனப்படுவதால், கரிய பெரிய மயக்கத்தையுடைய எனக்கும் அருள் ஞானம் வழங்குவது உனக்குக் கடனாம். எ.று.
உடல், பொருள், உயிர் அனைத்தையும் வேட்டபடி ஆட்டுவிக்கும் முதல்வன் என்பதற்கு, “என் உடையானே” என்கின்றார். எளிதில் பெறற்கு ஆகாத பெரிய திருவருட் செல்வத்தை யுடையவனாதலின், சிவனை “அரிய பெருமான்” என்றும், எளியவர்பால் தானே பேரிரக்கம் கொண்டு வந்தருளித் தனது அருளொளியால் உய்விப்பவனாதல் பற்றி, “எளியோமை ஆளும் பெருமான்” என்றும், தேவ தேவர்கள் முதல் மக்கள் உயிர் ஈறாக எல்லாரினும் எல்லா வகையாலும் பெருமையுடையவனாதலால், “யாவர்கட்கும் பெரிய பெருமான்” என்றும், ஞானமே திருமேனியாக வுடையவனாதலின், “சிவபெருமான்” என்றும், அன்பர் அன்பரல்லாதவர், இனியவர் இன்னாதவர், மேலோர் கீழோர், ஆடவர் பெண்டிர், இளையவர் முதியவர், யானைஉயிர் அணு உயிர் என்ற வேறுபாடின்றி எல்லா உயிர்களையும் ஒப்ப மதித்து ஒள்ளிய வாழ்வளித்தலின், “பித்தப் பெருமான்” என்றும் பெரியோர்கள் பாராட்டுதலால், “அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும் பெரிய பெருமான் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை உரிய பெருமாதவர் பழிச்சல் உண்மை” என்று இயம்புகிறார்.
“பெரும்பெருமான் என்பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான் சதுரப்பெருமான் என்மனத்தி னுள்ளே வரும்பெருமான் மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே” என வரும் திருவாசகத் திருப்பாடல் இங்கு நினைவுகூரத் தகுவதாகும். பெரிய தவங்களால் உயர்ந்த திருவாதவூரடிகள் முதலிய பெரு மக்கள் என்றற்கு “பெரிய பெருமாதவர்” என்று சிறப்பிக்கின்றார். பழிச்சுதல் - பரவிப் போற்றுதல். பெருமாதவத்தார் பொய் கூறாராகலின் பழிச்சல் உண்மை என்பதாம். “எனின் - என்பதனால்; என்று உலகவர் கூறுதலால். மலமறைப்பும், மாயா மலமறைப்பும் உடைமை தோன்றக் “கரிய பெருமால்” எனவும், அவ்விரண்டு முடைய மண்ணுலக மக்கட் பிறப்புடையேன் என்பதற்குக் “கரிய பெருமால் உடையேன்” என்றும் இசைக்கின்றார். இவ்விருவகை மாலும் திருவருள் ஞானத்தாலன்றி நீங்காவாகலின், “அருளல் உன்றன் கடன்” என முறையிடுகின்றார். “தன் கடன் அடியேனையும் தாங்குதல்” (கடம்) என்று பெரியோர் கூறுவது காண்க.
இதனால், இருவகை மயக்கம் அறுத்தருளுதல் சிவனுக்குக் கடன் என்பது தெரிவித்துக் கொண்டவாறாம். (8)
|