58.

    கேளாது போலிருக்கின்றனை யேழையிக்
        கீழ் நடையில்
    வாளா விடர் கொண்டலறிடும் ஓலத்தை
        மாமருந்தே
    தோளா மணிச்சுடரே தணிகாசலத்
        தூய்ப் பொருளே
    நாளாயி னென் செய்குவே னிறப்பாய
        நவை வருமே.

உரை:

     தணிகை மலையில் வீற்றிருக்கும் தூய பொருளாகிய முருகப் பெருமானே, துளைக்கப்படாத உயரிய முத்தாகிய மணியின் ஒளியே, பெருமையுடைய மருந்து போல்பவனே, ஏழையாகிய நான் கீழ்ப்பட்ட தாய உலக நடையில் தோய்ந்து வெறிதே இடர் பல கொண்டு அலறு குரலிட்டுச் செய்யும் ஓலத்தைக்கேளாதவன் போல் இருக்கின்றாயே; இவ்வாறே நாட்கள் கழியுமாயின் இறத்தல் துன்பம் வந்து விடுமாகலான் யான் என் செய்வேன், கூறுக. எ. று.

     செம்பொருளாகிய பரசிவத்தின் கூறாதல் பற்றித் “தணிகாசலத் தூய்ப் பொருளே” என்றும், மணி வகை ஒன்பதனுள் ஒன்றாகிய முத்துக்களில் உயர்ந்தது துளைபடாத முத்தாதலும் அதன் தூய ஒளி இனிதாதலும் நினைந்து “தோளா மணிச் சுடரே” என்றும், பிறவி நோய்க்கு ஒப்பற்ற மருந்தாதல் விளங்க “மாமருந்தே” என்றும் கூறுகின்றார். ஏழை-அறிவில்லாதவன்; ஈண்டு உண்மை ஞான மில்லாதவன் என்னும் பொருளது. உலக நடையிலும் கீழ்மக்கள் வாழ்க்கையியலை மனம் கொண்டு “இக் கீழ்நடை” எனக் குறிக்கின்றார். நடை - உலகியல் வாழ்க்கை. “நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே” (ஆனைக்கா) என நாவுக்கரசர் கூறுவது காண்க. காரணமின்றியே இடர்கள் உண்டாகின்றன என்றற்கு, “வாளா இடர் கொண்டு” என்றும், அலறிக் கூவியிடும் அபயக் குரலை, “ஓலம்” என்றும் உரைக்கின்றார். முருகப் பெருமானிடமிருந்து அருளொளி எய்தாமையால், “கேளாது போலிருக்கின்றனையே” என இசைக்கின்றார். “இழைத்த நாள் எல்லை கடப்பதன்று” (ஆரூர்) என்று பெரியோர் கூறுவது நினைவில் எழுதலால், “நாளாயின் இறப்பாய நவை வருமே என் செய்குவேன்” என்று கூறுகிறார். நவை - துன்பம். இறந்தால் இறைவன் பெயரை மறக்கும் தீமை எய்துமென அஞ்சுதல் தோன்ற, “இறப்பாய நவை வருமே” என மிகைபட ஓதுகின்றார்.

     இதனால், எனது ஓலக் குரலைப் புறக்கணித்து அருள் புரியக் காலம் கடத்தின் இறந்து உன்னை மறக்கும் தீமைக்கு ஆளாவேன் என விண்ணப்பித்தவாறாம்.

     (58)