580.

     சொல்லற் கரிய பெரியபரஞ்
          சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே
     மல்லற் கருமால் அயன்முதலோர்
          வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே
     புல்லற் கரிதாம் எளியேன்றன்
          பிழைகள் யாவும் பொறுத்திந்த
     அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே
          அருள்வாய் உன்றன் அருள்நலமே.

உரை:

     வாயால் சொல்லுதற் கொண்ணாத பெருமை தங்கிய பரஞ்சுடரே, கண்கள் மூன்றுடைய தீச்சுடரின் கொழுந்து போல்பவனே, வளமிக்க கரிய நிறமுடைய திருமால், பிரமன் முதலிய தேவர்கள் வாழ்த்தி வணங்கும் பெரிய அழகிய மாணிக்க மலையே, சேர்த்தற்காகாத எளிமை யுடைய என்னுடைய பிழைகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு துன்பமாகிய கடலிலிருந்து என்னைக் கரையேற்றி உன்னுடைய திருவருள் இன்பத்தில் சேர்த்தருள்க. எ.று.

     உள்ளத்தால் உணர்தற்கரிதாய பொருள் வாயால் சொல்லால் உரைக்கப் படாமை பற்றி, “சொல்லற்கு அரிய பெரிய பரஞ் சுடரே” எனவும், சொல்லுக் கரிதாயினும் உள்ளத்தின்கண் ஞான நாட்டம் உடையார்க்குப் பரஞ்சுடராய்த் தோன்றுதலின் “பரஞ் சுடரே” எனவும், உள்ளொளி பெருக்கி யுலப்பிலா ஆனந்தம் சுரக்கும் பெருமையுடையதாகலின், “பெரிய பரஞ்சுடரே” எனவும் சிறப்பிக்கின்றார். பரஞ்சுடர் என்றது, சோதியுட் சோதியாய் விளங்கு ஒளிப் பொருளாதல் பற்றி, “அண்டமார் இருளூடு கடந்து உம்பர் உண்டு போலும் ஓர் ஒண்சுடர்” (சித்தத்) என நாவுக்கரசர் நவில்வது காண்க. அகள வடிவில் பரஞ்சுடராய்க் காணப் படாமையும், சகள வடிவில் சிவனுருவில் காணப் படுகின்றமையும் கூறியதாம். சிவ வுருவில் சிறப்புற விளங்குவது முக்கண் மூர்த்த மாகலின்; பரஞ்சுட ரென்ற தோடமையாது, “முக்கண் சுடர்க் கொழுந்தே” என்று மொழிகின்றார். முக்கண்ணிடத்தும் எழுகின்ற ஞானவொளி பரஞ்சுடரின் கொழுந்து போல்வதால் “சுடர்க் கொழுந்து” எனப்படுகிறது. மல்லல் - வளம்; அஃதாவது திருவருட் செல்வம் சிறக்கவுடைமை. கருமால் என்பதில் கருமை திருமாலின் நிறங் குறித்தது. மணிக்குன்று - மாணிக்க மலை. “மருவார் கொன்றை மதி சூழ மாணிக்கத்தின் மலை போல வருவார்” (கடவு) என்று சுந்தரர் பாடுவது காண்க. எளிமை மிகுதி பற்றி அருகிற் சேர விடாமை தோன்றப் “புல்லற் கரிதாம் எளியேன்” என்கின்றார். அரிதாம் என்பது எளியேன் என்பதன்கண் உள்ள எளிமையோடு இயைகிறது. பொறுத்தல் இறைவற்குக் கடமையாகலின், “பிழைகள் யாவும் பொறுத்து” என வேண்டுகிறார். அல்லல் - துன்பம். அருள் நலம் - திருவருள் ஞானவின்ப வாழ்வு.

     இதனால், திருவருள் ஞான வாழ்வு தருமாறு விண்ணப்பித்தவாறாம்.

     (10)