2

2. பிராத்தனைப் பதிகம்

 

திருவொற்றியூரும், திருத்தில்லையும்

 

    அஃதாவது திருவொற்றியூர் இறைவனையும் தில்லைக் கூத்தப்பிரானையும் மனக்கண் முன் நிறுத்தி வேண்டிக்கொண்டது. இதன் கண் தம்மைப் பற்றி வருத்தும் வெப்புநோய் செய்யும் வருத்தத்தால் அதற்குக் காரணம் நினைந்து தாம் செய்த பிழைகளையும், வாழ்த்தி வணங்காமை முதலிய தம் குற்றங்களையும் உணர்ந்து பொறுத்தருள்க என வேண்டுவதும், அருளாவிடின் உய்தி யில்லை என்றும் இவ்வுலகில் தூக்கிட்டுச் சாவதல்லது தமக்கு வழியில்லை என்றும் முறையிடுவதும், அருள் புரிவாராயின் இறைவனைத் தடுப்பார் ஒருவருமில்லை யெனவும், திருவருள் எய்தின் ஞான இன்பம் பெறலாம் எனவும், அதனால் அருள் புரிக எனவும் அடிகள் வேண்டுமாறும் காணலாம். இதன்கண் வரும் பாட்டுக்கள் அந்தாதித் தொடையில் அமைந்திருக்கின்றன. 

 

கட்டளைக் கலித்துறை

581.

     அப்பார் மலர்ச்சடை ஆரமு
          தேஎன் அருட்டுணையே
     துப்பார் பவள மணிக்குன்ற
          மேசிற் சுகக்கடலே
     வெப்பார் தருதுய ரால்மெலி
          கின்றனன் வெற்றடியேன்
     இப்பார் தனில்என்னை அப்பாஅஞ்
          சேல்என ஏன்றுகொள்ளே.

உரை:

     கங்கை தங்கிய மலரணிந்த சடையை யுடைய அரிய அமுதமானவனே, எனக்குத் திருவருளாகிய துணையே, பவளம் போன்ற சிவந்த அழகிய மலை போல்பவனே, ஞான இன்பக் கடலே, அருள் அறிவாகிய பயனில்லாத அடியவனாகிய யான், வெப்பு நோயால் மிக்க துன்பம் அடைந்து உள்ளமும் உடலும் மெலிகின்றேனாதலால், இப்புவியில் என்னை நோக்கி, “அப்பா, நீ அஞ்சாதே” என்று சொல்லி, என்னை நின்பால் ஏற்றருள்க. எ.று.

     அப்பு - நீராகிய கங்கையாறு. மலர்ச்சடை - கொன்றை முதலிய மலர்களை யணிந்த சடை. தேவர் அமுதம் போலப் பாற்கடலில் மலையைப் பெய்து, அரிதிற் கடைந்தெடுக்கும் அமுதிலும் பெற லருமை வாய்ந்ததென்பதற்கு, “ஆரமுது” என்கின்றார். உயிர்கட்குத் துணையாவது திருவருளாதலினாலே, “என் அருட்டுணையே” என்று சொல்லுகிறார். துப்பு - பவளம். துப்பார் பவளமென்றது ஒரு பொருட் பன்மொழி. மணி - அழகு. மாணிக்க மணி யென்றுரைப்பினும் பொருந்தும். பவளத்திலும் ஒளிமிக்கதாகலின், மணியும் உடன் கூறப்பட்டது. சிற்சுகம் - ஞான இன்பம். ஞானமே திருமேனியாக வுடையவனாதலினாலே, அவன்பாற் பெறலாகும் இன்பம் “சிற்சுகம்” எனப்படுகிறது. வெப்பு - வெப்பு நோய்; சுர நோய். ஆர்தரு துயர் - நிறைந்து வருதுன்பம். வெப்பு நோயால், உள்ளத்தின் வன்மை குறைதலே யன்றி, உடலின் வன்மையும் கரைந்தொழிதலின், “மெலிகின்றனன்” எனப் புகல்கின்றார். “வெற்றடியேன்” என்பதில் வெறுமை, பயனில்லாமை. என - என்று சொல்லி, இப்பார்தனில் - இந் நிலவுலகில். பார் - நிலவுலகம். ஏன்று கொள் - ஏற்றுக்கொள். “என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்” (நீத்தல் விண்ணப்பம்) என வரும் திருவாசகத் தொடர் இங்கு நினைவு கூரத் தகுவதாகும்.

     இதனால், வெப்பு நோயால் வருந்தி மெலிகின்ற என்னை நோய் தணித்து நின்பால் ஏற்றருள்க ஏன வேண்டிக் கொண்டவாறாம்.

     (1)