582. ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்
முக்கண் எந்தைஎன்றே
சான்றுகொள் வாய்நினை நம்பிநின்
றேன்இத் தமிஅடியேன்
மான்றுகொள் வான்வரும் துன்பங்கள்
நீக்க மதித்திலையேல்
ஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய்
வேன்இந்த நானிலத்தே.
உரை: நம்முடைய இனிய வுயிர் போன்ற முக்கட் பெருமானாகிய எந்தை என்று தனித்த அடியேனாகிய யான் உன்னையே நம்பியுள்ளேன்; என்னை எப்பொழுது ஏற்றுக் கொள்ளப் போகின்றாய்; எனது நம்பிக்கைக்குச் சான்று வேண்டி வருவது போல வந்து வருத்தும் துன்பங்களைப் போக்குதற்கு நீ நினையாயின், இவ்வுலகத்திலே தூக்கிட்டுக் கொண்டு சாவதல்லது வேறு யாது செய்ய வல்லேன்? எ.று.
நிலவுலகம், மலைப்பகுதி, காடு, வயல், கடற்கரைப் புறம், பாலைப் பகுதி என ஐவகைப்பட்டு முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பெயர் பெறுமாயினும், பாலை ஏனையவை போல நலம் பயப்ப தின்மையின், குறிஞ்சி முதலிய நான்கையுமே சிறப்பாகக் கொண்டு, “நானிலம்” என்பது ஒரு மரபு அதனால் “இந்த நானிலத்து” என வுரைக்கின்றார். ஒரு பற்றுமின்றி அந்தரத்தே ஒரு பந்து போல் தொங்கிக்கொண்டு சுழன்று திரிவதனால் நானில மெனப்படுவதாயிற்று என்பதும் உண்டு. நாலுதல் - தொங்குதல். தனக்கெனவோர் உருவின்றி உடற்குள்ளிருந்து உலகியலில் வாழ்விக்கும் உயிர் போல, உயிரொடு கூடிய உயிர் வாழ்வை இயக்குவது பற்றிச் சிவனை “இன்னுயிர் போல் முக்கண் எந்தை” என மொழிகின்றார். போல் என்னும் வினைமுதனிலை ஈண்டுப் புனைபந்து என்றாற் போலப் பெயரெச்சப் பொருளில் வந்தது. முக்கண்களை யுடையனாதல் பற்றி, சிவனை “முக்கண் எந்தை” என்று கூறுகின்றார். உலகிற் பிறருடைய தொடர்பனைத்தும் விட்டு நீங்கி நிற்குமாறு புலப்படத் “தமியடியேன்” எனவும், தான் சிவனையே நம்பிப் பற்றுக் கோடாகக் கொண்டிருப்பது விளங்க, “நினை நம்பி நின்றேன்” எனவும், எனது நம்பிக்கையை வற்புறுத்தற்கு நல்ல சான்று வேண்டி வருவது போல் வந்தடர்க்கும் துன்பங்களைப் போக்கற்கு நீ மனங் கொள்ளாயாயின் என்பார், “சான்று கொள்வான் வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல்” எனவும் உரைக்கின்றார். கொள்வான் - வானீற்று வினையெச்சம். ஞான்று கொள்ளுதல் - தூக்கிட்டுக் கொண்டு சாதல். அச்செய்கை தீ வினையாகக் கருதப்படுவ தாயினும் அதுதவிர வேறு வழி எனக்கில்லை என்பார். “ஞான்று கொள்வேனன்றி யாது செய்வேன்” என இயம்புகின்றார்.
இதனால், நீ அருளாயாயின், தூக்கிட்டுக் கொண்டு சாவதல்லது எனக்கு வேறு வழியில்லை என முறையிட்டவாறாம். (2)
|