584. அருளார் அமுதப் பெருங்கட
லேதில்லை அம்பலத்தில்
பொருளார் நடம்புரி புண்ணிய
னேநினைப் போற்றுகிலேன்
இருளார் மனத்தின் இடர்உழந்
தேன்இனி யாதுசெய்கேன்
மருளார் மலக்குடில் மாய்ந்திடில்
உன்அருள் வாய்ப்பதற்கே.
உரை: அருளாகிய அமுதமே நிறைந்த பெரிய கடலே, தில்லை யம்பலத்தில் உயரிய கருத்துள்ள கூத்தினை யாடும் புண்ணியப் பொருளே, நின்னைப் போற்றகில்லேன், இருள் நிறைந்த மனத்தினை யுடையேனாய்த் துன்பத்தில் உழன்றேன். மருட்சி விளைவிக்கும் மலக்கூடாகிய இவ்வுடம்பு மடிந்து மறையின் உன் திருவருட்பேறு எய்துதற் பொருட்டு இனி வேறு என் செய்ய வல்லேன்? எ.று.
திருவருளையே அமுதமெனச் சுவைத்துரைப்பது மரபாதலின், “அருளார் அமுதம்” என இறைவனைச் சிறப்பிக்கின்றார். இறைவன் திருக்கூத்து உயிர்க்கருள் புரியும் நோக்கத்துடன் நிகழ்வதாகலின், “பொருளார் நடம்புரி புண்ணியனே” என்கின்றார். “மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டு மலம், சாய அமுக்கி யருள் தான் எடுத்து நேயத்தால், ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல், தான் எந்தையார் பரதந்தான்” (உண் - விளக்.) எனத் திருவதிகை மனவாசகங் கடந்தார் கூறுவது காண்க. போற்றுதற்குரிய பரம்பொருளென்றும் அதனைப் போற்றுவது கடனென்றும் அறியாமை நிறைந்த மனமென்றற்கு “இருளார் மனம்” என்று இயம்புகின்றார். அதனால் தாம் போற்றாமையும் இடருழந்தமையும் கூறுவார் “இருளார் மனத்தின் நினைப் போற்றுகிலேன்” எனவும், “இடருழந்தேன்” எனவும் இயைய உரைக்கின்றார். மாயா காரியமாய் மயக்கம் செய்யும் இயல்பு பற்றி இவ்வுடம்பை “மருளார் குடில்” என்றும், உள்ளே மலந் தங்குதலால் “மலக்குடில்” என்றும் உரைக்கின்றார். குடில் - குடிசை; சிறு வீடு என்றுமாம். உடம்பெடுத்தது அதனைக் கருவியாகக் கொண்டு, வழி பட்டுத் திருவருள் எய்துதற்கேயாக; அது செய்யாமை திருவருள் வாய்ப்புக்கு இடந் தராமையின், “உன் அருள் வாய்ப்பதற்கு யாது செய்கேன்” என்கின்றார். “வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின்” (கோயில்) என நாவுக்கரசர் மொழிவது காண்க. “அருளாரமுதப் பெருங்கடல்வாய் அடியாரெல்லாம் புக்கழுந்த, இருளாராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே” (பிராத்தனைப்பத்து - 3) எனவரும் திருவாசகத் தொடர் இங்கு ஒப்பு நோக்கி யுணரத் தகுவதாகும்.
இதனால், இருளார் மனத்தால் நின்னைப் போற்றாது வருந்தினேன்; பொறுத்து ஆண்டருள்க என வேண்டியவாறாம். (4)
|