585. வாயார நின்பொன் மலர்த்தாள்
துணையே வழுத்துகிலேன்
ஓயா இடர்உழந் துள்நலி
கின்றனன் ஓகெடுவேன்
பேயாய்ப் பிறந்திலன் பேயும்ஒவ்
வேன்புலைப் பேறுவக்கும்
நாயாய்ப் பிறந்திலன் நாய்க்கும்
கடைப்பட்ட நான்இங்ஙனே.
உரை: சிவபெருமானே, நாயினும் கடைப்பட்டவனாகிய யான், நின்னுடைய பொன்னிறம் கொண்ட தாமரை மலர் போன்ற திருவடி யிரண்டையும் வாயார வாழ்த்தி வணங்குவதில னாதலால், இடையறாத் துன்பத்தால் வருந்தி மனநோய் மிகுகின்றேன்; ஓ, கெடுவேனாகிய யான் பேயாகவும் பிறந்தேனில்லை; பேயை யொத்தவனாகவுமில்லை; புலால் துண்டத்தைப் பெற்று மகிழும் நாயாகவும் பிறக்கவில்லை; நாயினுங் கடையேனாகிய யான் இவ்வுலகில் இருப்பதால் என்ன பயன்! எ.று.
இறைவன் திருவடித் தாமரைகளை நெஞ்சார நினைந்து, வாயார வாழ்த்துவது பெரியதொரு கடனாக விருப்பதை யுணர்கின்ற பொழுது ஒளியுற்ற மனம், அது செய்யாமை நினைந்து வருந்துவது தோன்ற, “வாயார நின் பொன் மலர்த்தாள் துணையே வழுத்துகிலேன்” எனவும், அதனால் உள்ளம் வெதும்பித் தம்மைத் தாமே நொந்து கொள்ளுகிறாராதலால், “உள் நலிகின்றனன்” எனவும், அதற்குக் காரணம் காண்பவர், புலன்கள் மேல் செல்கின்ற ஆசைகளும் அவற்றால் விளைகின்ற துன்பங்களும் எனக் கண்டு “ஓயாது இடர் உழந்தேன்” எனவும் கூறுகின்றார். தம் மனம் ஆசை வழி நின்று அலைப்புண்ணும் பேயாய்த் திரியும் நிலையினதாயினும் அதற்கேற்பப் பேயுடம்பினைப் பெற்றிலேன் என்பார் “பேயாய்ப் பிறந்திலன்” எனவும், தூல வுடம்பொடு நிற்றல் பற்றிப் “பேயும் ஒவ்வேன்” எனவும், புலாலுண்ணும் நாய்போன்று உண்டதே உண்ணும் இழிந்த தன்மையேன் எனினும், அத்தகைய நாயுடம்பினைப் பெறாது மனித உடம்புடன் திரிகின்றேன் என்பார். “புலைப் பேறுவக்கும் நாயாய்ப் பிறந்திலேன்” எனவும் சொல்லி வருந்துகிறார். புலைப் பேறு - எலும்புத் துண்டு.
இதனால், உடம்பு பெற்றும் வாழ்த்தி வணங்காமைக்கு வருந்தி விண்ணப்பித்தவாறாகும். (5)
|