586.

     நான்செய்த குற்றங்கள் எல்லாம்
          பொறுத்துநின் நல்லருள் நீ
     தான்செய் தனைஎனில் ஐயாமுக்
          கட்பெருஞ் சாமிஅவற்
     கேன்செய் தனைஎன நிற்றடுப்
          பார்இலை என்அரசே
     வான்செய்த நன்றியை யார்தடுத்
          தார்இந்த வையகத்தே.

உரை:

     ஐயனே, மூன்றாகிய கண்களையுடைய பெரிய சாமியே அருளரசே, நான் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்து நீ எனக்கு அருள்செய்வாயாயின், என்னைச் சுட்டி இவனுக்கு இவ்வருளைச் செய்யலாமோ, செய்தல் கூடாதே என்று உன்னைத் தடுப்பவர் யாவர் உளர்? மழை முகில் செய்த உதவியை உலகில் எவரேனும் தடுத்த துண்டோ? இல்லை யன்றோ! எ. று.

     குணமான செயல்களைத் தாம் செய்ததில்லை என்பது தோன்ற “நான் செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்து” எனவும், நலம் பயக்கும் வகையில் உனது திருவருள் அமைந்திருத்தலால் அதனைக் குறைவின்றி அருளல் வேண்டும் என்பதற்காக, “நல்லருள் நீதான் செய்தனை எனில்” எனவும் இயம்புகின்றார். நல்ல தல்லாதது அருளாகாமையின் நல்லருள் என்றது இயல்புபற்றியது எனினும் அமையும். முக்கட் பகவனைவிடப் பெருமைமிக்க தேவர்கள் இல்லை யாதலின், “முக்கட் பெருஞ் சாமி” என மொழிகின்றார். அவர்க்கு ஒப்பாரோ மிக்காரோ இருப்பரேல் தடுத்தற்குரிய தகுதி யுடையராவர். அப் பெருமானும் தடை யுண்பர். அப் பெற்றியார் ஒருவருமிலராதலின் அவருக்கு ஏன் செய்தனை யென நிற்றடுப்பார் இலையென்றும், அரசனாவான் தன் கோற்கீழ் வாழ்வார்க்குத் தண்ணளி செய்வனேல் தடுப்பவரில்லை என்னும் உலகியல் அறம் காட்டற்கு, “என் அரசே” என்றும் இசைக்கின்றார். தடுத்தலும், தடையுண்ணலும் அறநெறி யாகா என்பதை வற்புறுத்தற்கு, “வான் செய்த நன்றியை யார் தடுத்தார் இந்த வையகத்தே” என்று உரைக்கின்றார்.

     இதனால், இறைவன் திருவருள் செய்யலுறின் தடுப்பாரொருவரும் இலர் என்று தெரிவித்தவாறாம்.

     (6)