588.

     விரிதுய ரால்தடு மாறுகின்
          றேன்இந்த வெவ்வினையேன்
     பெரிதுய ராநின்ற நல்லோர்
          அடையும்நின் பேரருள்தான்
     அரிதுகண் டாய்அடை வேன்எனல்
          ஆயினும் ஐயமணிப்
     புரிதுவர் வார்சடை யாய்நீ
          உவப்பில் புரியில்உண்டே.

உரை:

     ஐயனே, செம்மணி போல் பின்னிய சிவந்த நீண்ட சடையினை உடையவனே, மிகவும் உயர்ந்து விளங்குகின்ற நன்மனமும் நற்பண்பும் உடையோர் பெறுதற்குரிய நினது ஞானப் பேரருள் பெறற்கரிது என்பர்; எனினும், நீ திருவுளம் கொண்டு அருள்வாயாயின் மேன்மேல் பெருகி விரியும் துன்பங்களையுற்றுத் தடுமாறுகின்ற கொடு வினையேனாகிய எனக்கு அதனை எய்துதலும் உண்டாம். எ. று.

     மணி, செம்மணியாகிய மாணிக்க மணி. மணிபோல் பின்னி முறுக்கிய சடை என்றற்கு, “மணிப்புரி சடை” எனவும், அச்சடையும் சிவந்த நிறமுடையதாதலாய் நீண்டு கிடத்தலின், “துவர் வார் சடை” எனவும் சிறப்பிக்கப்படுகிறது. தலத்தாலும் சிவஞானத்தாலும் மிக வுயர்ந்த பெருமக்களை, “பெரிதுயரா நின்ற நல்லோர்” என்று புகழ்கின்றார். அவர்களன்றிப் பிறர் பெறுதற்கரியது சிவனது திருவருள் என்பது விளங்க, “நல்லோர் அடையும் நின் பேரருள்தான் அரிது கண்டாய்” என வுரைக்கின்றார். பருந்து உயர்ந்து பறக்கும் வானத்துக்கண் ஈயும் பறப்பதுபோல எளியோனும் முயன்று பெறலா மெனினும் அதற்கும் இறைவன் திருவருள் இன்றியமையாதது என்பது புலப்பட, “அருள்தான் அடைவேன் எனலாயினும் உவப்பில் புரியில் உண்டே” என்று புகன்று மொழிகின்றார். வெவ்விய வினைகளைச் செய்தார்க்குத் துன்பங்கள் மேன்மேல் பெருகிவரும் என்பதுபற்றி, “விரிதுயரால் தடுமாறுகின்றேன் இந்த வெவ்வினையேன்” என விளம்புகிறார்.

     இதனால், இறைவனருள் பெறின் பெறற்கரிய ஞானப் பேரருளையும் பெறலாம் என்பது விளக்கியவாறாம்.

     (8)