59.

    நவையே தருவஞ்ச நெஞ்சக மாயவும்
        நானு னன்பர்
    அவையே யணுகவும் ஆனந்த வாரியில்
        ஆடிடவும்
    சுவையே யமுதன்ன நின்றிரு நாமம்
        துதிக்கவு மாம்
    இவையே யெனெண்ணம் தணிகா சலத்துள்
        இருப்பவனே.

உரை:

     திருத்தணிகை மலையில் எழுந்தருளியிருப்பவனே, துன்பம் பயக்கும் வஞ்சனைக் கிடமாகிய நெஞ்சம் கெடுவதும், அடியனாகிய யான் உன்னுடைய அன்பர் கூட்டத்தை அடைவதும், ஆங்குப் பெருகும் ஞான வின்பப் பெருக்கில் மூழ்கிக் களிப்பதும், சுவை மிக்க தேவரமுது போன்ற நின்னுடைய திருப்பெயர்களை ஓதித் துதிப்பதும் ஆகிய இவைகளே என் மனத்துறையும் எண்ணங்களாம், எ. று.

     பொருளிலக்கணம் வகுத்துரைக்கும் முதலும் கருவுமாகிய பொருள்கள் மாறினும் மாறுதலின்றி ஒரு தன்மையனாய் வீற்றிருத்தல் பற்றி, முருகப் பெருமானைத், தணிகாசலத்துள் “இருப்பவனே” என்று ஏத்துகின்றார். வஞ்ச நினைவுகள் நெஞ்சின் கண் நின்று துன்பம் விளைவித்தலால், “நவையே தரு வஞ்ச நெஞ்சகம்” என்றும், இடமாகியது கெட்டவழி இடத்து நிகழ் பொருள் முற்றும் கெடும் என்பது கருதி, “நெஞ்சகம் மாயவும்” என்றும் எண்ணுகின்றார். அன்பர் அவை - அன்பர்களின் கூட்டம். அன்பர் கூட்டம் ஞானம் நல்கிப் பேரின்பத்தில் தோய்வித்தலால், “நானுன் அன்பர் அவையே அணுகவும் ஆனந்தவாரியில் ஆடிடவும்” எண்ணுகிறேன் எனவுரைக்கின்றார். அல்லாதார், அஞ்ஞானத்தை உணர்த்துவராகலின், அன்பர் அவையே என்றவிடத்து ஏகாரம், பிரிநிலை. அன்பர் அவையை அணுகிய வழி, ஞானானந்தம் உடன் எய்துதலால் “ஆனந்தவாரி” எனப்பொதுப்படப் புகல்கின்றார். “நம்புவாரவர் நாவில் நவிற்றினால், வம்பு நாண்மலர் வார்மது வொப்பது” (நமச்சிவாய) என ஞானசம்பந்தர் முதலியோர் கூறுதலால், “சுவையேய் அமுதன்ன நின் திருநாமம்” ஓதித் துதிப்பது எனக்கு எண்ணம் என்கின்றார். இவ் வெண்ணங்களை நிறைவேற்றுக என்பாராய், “இவையே என் எண்ணம்” என்று இயம்புகின்றார்.

     இதனால், மனத் துறையும் எண்ணங்களை எடுத்தோதி அவை நிறைவுற அருளுக என வேண்டியவாறாம்.

     (59)