595. எண்ணா தெளியேன் செயும்பிழைகள்
எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ
தண்ணா நினது கடன்கண்டாய்
அடியேன் பலகால் அறைவதென்னே
கண்ணார் நுதற்செங் கரும்பேமுக்
கனியே கருணைக் கடலேசெவ்
வண்ணா வெள்ளை மால்விடையாய்
மன்றா டியமா மணிச்சுடரே.
உரை: கண் பொருந்திய நெற்றியை யுடைய செங்கரும்பு போல்பவனே, முக்கனியே, கருணைக்கடலே, செம்மை நிற முடையவனே, திருமாலாகிய வெள்ளை நிற எருதை ஊர்தியாக உடையவனே, அம்பலத்தில் ஆடுகின்ற மாணிக்க மணிச்சுடரே, எளியனாகிய யான் நின்னை நினைவில் கொள்ளாமல் செய்த பிழைகள் அத்தனையும் பொறுத்து இப்பிறப்பில் என்னை ஆட்கொள்வது அணுகுதற்கரிய நினது கடனாகும்; அதனை அடியேன் பலமுறையும் சொல்லுவது வேண்டா அன்றோ? எ.று.
தின்றால் இனிக்கும் செங்கரும்பு போல நினைத்தால் நினைக்குந்தொறும் இனியனாதல் பற்றிச் “செங்கரும்பே” என்கின்றார். “நினைவார் நினைய இனியான்” (புறவம்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. எளிமைபற்றி, “முக்கனியே” என்கிறார். அளப்பறிய அருளாளன் என்றற்குக் “கருணைக் கடல்” எனப்படுகின்றான். செம்மேனியம்மானாதலால் “செவ்வண்ணன்” என்று சிறப்பிக்கின்றார். திருமால் கரிய மேனியன் ஆயினும் வெள்ளை நிற விடையாய்த் தாங்குவதுபற்றி “வெள்ளை மால் விடையாய்” எனப் போற்றுகின்றார். பொன்னம்பலத்தில் மாணிக்க மணியின் ஒளி திகழத் திருக்கூத்தாடுதலால் ‘மன்றாடிய மாமணிச்சுடரே’ எனப் போற்றி மகிழ்கின்றார். செய்வன பிழையென்று தெரியாமல் செயப்படும் பிழைகளை எஞ்சாமல் பொறுத்தருளுதல் பெரியோர் கடன் என்பது பற்றி “எண்ணாது எளியேன் செயும் பிழைகள் எலாம் பொறுத்து இங்கு எனையாள்வது நின் கடன் கண்டாய்” என்றும், கடனாயவற்றைப் பன்முறையும் எடுத்தோதுவது வேண்டா கூறலாய் முடிதலின் “பலகால் அறைவது என்னே” என்றும் பகர்கின்றார். அண்ணா நினது கடன் என இயைத்து அணுகுதற்குரிய பெரியோனாகிய உனது கடன் எனக் கொள்க. அண்ணா என்பதைப் பிரித்து அண்ணன் என்பதன் விளியாகக் கொள்ளினும் அமையும். “அண் என இறுதி ஆ, ஆகும்மே” (விளி) என்பது தொல்காப்பியம். செவ்வண்ணன் என்பது செவ்வண்ணா என வந்ததற்கும் இதுவே விதி யெனக் கொள்க.
இதனால், அறியாது செய்த பிழைகளைப் பொறுத்தருள்வது கடன் என விண்ணப்பித்தவாறாம். (5)
|