596. பாலே அமுதே பழமேசெம்
பாகே எனும்நின் பதப்புகழை
மாலே அயனே இந்திரனே
மற்றைத் தேவ ரேமறைகள்
நாலே அறியா தெனில் சிறியேன்
நானோ அறிவேன் நாயகஎன்
மேலே அருள்கூர்ந் தெனைநின்தாள்
மேவு வோர்பால் சேர்த்தருளே.
உரை: நாயகனே, பாலும் அமுதும் பழமும் செம்பாகும் ஒக்கும் நின் திருவடிப் புகழைத் திருமாலும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும், வேதங்கள் நான்கும் அறிவதில்லை யென்றால், அறிவிற் சிறியனாகிய யான் அறிவேனோ? என்மே லருள்கொண்டு நின் திருவடி ஞானத்தைப் பெற்ற தொண்டர் பெருமக்களிடத்தே என்னைச் சேர்த்தருள்க. எ.று.
அமுதமெனப் பாலின் வேறாகக் கூறுவதால் இது கடல் கடையப் பெற்ற அமுதம் என்க. பக்குவமுறக் காய்ச்சப்பெற்ற பாகு என்றற்குச்செம்பாகு எனப் பகர்கின்றார். செம்பாகு நிறத்தாற் சிவனை யொத்தலின், இறைவன் திருவடிப்புகழைச் சிந்திக்குந்தோறும், சிந்தித்து வாயால் ஓதுந்தோறும் பால் முதலாயவற்றை நிகர்த்த இன்பம் சுரத்தலின், “பாலே அமுதே செம்பாகே எனும் நின் பதப்புகழ்” என்று சிறப்பிக்கின்றார். மாலே அயனே என்பன முதலாக எண்ணி அறியாது என அஃறிணையால் முடித்தது செய்யுளாகலின் அமையும் என்க. “பலவயினானும் எண்ணுத்திணை விரவுப் பெயர் அஃறிணை முடிபின செய்யுளுள்ளே” (கிளவி) என்பர் தொல்காப்பியர். மறைகள் நாலே அறியாது என்றாராயினும் மறை நான்கும் வல்லவர்கள் அறியார் என்பது கருத்தாகக் கொள்க. அறிவாற் சிறியனாதலின் நானறியேன் என்றற்கு “சிறியேன் நானோ அறியேன்” என உரைக்கின்றார். நாயகன் - தலைவன். திருவடி ஞானத்தால் உயர்ந்த பெருமக்களிடையே சேர்தலின் பொற்குன்றம் சேர்ந்து காக்கையும் பொன்னாவதுபோல் யானும் திருவடி ஞானம் பெற்று உய்வேன் என்பாராய், “என்மேலே அருள் கூர்ந்து என்னை நின் தாள் மேவுவோர்பால் சேர்த்தருள்க” என வேண்டுகிறார்.
இதனால், திருவடி ஞானம் பெற்ற மேன்மக்கள் கூட்டத்தில் என்னைச் சேர்த்தருள்க என விண்ணப்பித்தவாறாம். (6)
|