598.

     பொய்யோர் அணியா அணிந்துழலும்
          புலையேன் எனினும் புகல்இடந்தான்
     ஐயோ நினது பதம்அன்றி
          அறியேன் இதுநீ அறியாயோ
     கைஓர் அனல்வைத் தாடுகின்ற
          கருணா நிதியே கண்ணுதலே
     மெய்யோர் விரும்பும் அருமருந்தே
          வேத முடிவின் விழுப்பொருளே.

உரை:

     கையின்கண் அனலை யேந்தி ஆடுகின்ற கருணாநிதியே, கண் பொருந்திய நெற்றியை யுடையவனே, மெய்யறி வுடையோர் விரும்புகின்ற அருமருந்தாகியவனே, வேத முடிவில் எழுந்தருளும் உயர்ந்த பரம்பொருளே, பொய்யையே பூரணமாகக் கொண்டிருக்கும் புலைத்தன்மை யுடையேனாயினும் நின்னுடைய திருவடியன்றிப் புகலிடம் அறியேன், இதனை அறிய மாட்டாயோ? எ.று.

     ஒரு கையில் தீயை ஏந்திக்கொண்டு அம்பலத்தில் திருக்கூத்தாடு கின்றானாதலில், “கையோர் அனல் வைத்தாடுகின்ற கருணாநிதியே” என்கின்றார். “முழங்குந் தழற்கைத் தேவா” (சத்திமுற்) என நாவுக்கரசரும் நவில்கின்றார். நில முதலிய ஐம்பெரும் பூதங்களையும் தன்னுருவில் கொண்டவன் அம்பலத்தாடும் பெருமான் என்பது விளங்க, ஒரு கையில் அழலும், திருமுடியில் நீரும், மான் உருவில் காற்றும், முயலகன் உருவில் மண்ணும், அம்பலம் வானுமாகக் கூறுவது பண்டையோர் மரபு என உணர்க. அனலேந்தி ஆடுகின்றானெனினும் அருளே புரியும் செயலினன் என்றற்கு, “கருணா நிதியே” எனக் குறிக்கின்றார். கண்ணுதல் என்றது, முற்றறிவினன் என்ற குறிப்பும் புலப்பட நின்றது. உலகியல் வாழ்வின் மெய்ம்மை யுணர்ந்தோர் பிறப்பிறப்புக்கள் தரும் நோயையறிந்து அதற்குரிய மருந்தை நாடியே நிற்பராதலின், அதற்கியைய, “மெய்யோர் விரும்பும் அருமருந்தே” என மொழிகின்றார். பிறவிப் பிணிக்கு மருந்தாம் இறைவன், ஞானமேயாய் வேதங்களின் முடிபொருளாக விளங்குவதுபற்றி “வேத முடிவின் விழுப்பொருளே” என விளம்புகிறார். புலைக்குணங்களில் தலையானது பொய்ம்மையாதலின், “பொய்யோர் அணியா அணிந்துழலும் புலையேன்” என தம்மைப் பழிக்கின்றார். பெருங் குற்றங்களான பொய், புலை, கொலை, கள், காமம் என்ற ஐந்தனுள் பொய் முதற்கண் வைத்துப் பேசப்படுவது காண்க. குணமுடையார்க்கே யன்றி ஏனையோர்க்கும் இறுதியில் உறுதி நல்குவது இறைவன் திருவடியே யாதலின், “புகல் இடந்தான் நினது பதமன்றி அறியேன்” என உரைக்கின்றார். உயிர் வகையுள் குற்றம் மிகப் புரிந்தவரும், குற்றப் பயனை நுகர்ந்து கழித்து நன்ஞானம் எய்தி முடிவில் இறைவன் திருவடி நீழல் இன்ப வாழ்வு பெற்றே தீருவர் என்பது சைவத்தின் முடிபொருளாதலின் அச்சைவ முதல்வனாகிய நீ அஃதறியாத தன்று என்பாராய், “இதுநீ யறியாயோ” என உரைக்கின்றார். “புறச்சமய நெறி நின்றும் அச்சமயம் புக்கும்” எனத் தொடங்கும் சிவஞான சித்தித் திருவிருத்தம் முடிவில், “சைவத் திறத்தடைவர் இதிற் சரியை கிரியா யோகம் செலுத்திய பின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்” என்று கூறுவதனால் உணர்ந்து கொள்க.

     இதனால், பொய்யே மேற்கொண்ட புலையனாயினும் திருவடிப் பற்றுடையேன் என விண்ணப்பித்தவாறாம்.

     (8)