599.

     இன்னே எளியேன் பொய்யுடையேன்
          எனினும் அடியன் அலவோநான்
     என்னே நின்னைத் துதியாதார்
          இடத்தில் என்னை இருத்தினையே
     அன்னே என்றன் அப்பாஎன்
          ஐயா என்றன் அரசேசெம்
     பொன்னே முக்கட் பொருளேநின்
          புணர்ப்பை அறியேன் புலையேனே.

உரை:

     அம்மையே, எனக்கு அப்பனே, என்னுடைய ஐயனே! எனக்கு அரசனே, செம்பொன்னே, மூன்றாகிய கண்களையுடைய முதற் பொருளே, எளியனாகிய யான் பொய்யனாகியும் நினக்கு அடியவனல்லவோ? இப்பொழுது உன்னை நினைந்து தொழாதவர் கூட்டத்தில் என்னை இருக்கவைத்தாயே, என்னே உன் திருக்குறிப்பு இருந்தவாறு! எ.று.

     ஐயன் என்றது அன்னைக்கும் அப்பனுக்கும் தனக்கும் தந்தையும் தலைவனுமாவான் என்பது குறித்தது. இவர்களின் வேறாகப் பெறப்படும் பொருள்களில் தலைசிறந்தது பற்றி “செம்பொன்னே” எனவும், அப் பொன்னிறம் படைத்த தெய்வங்களில் முக்கட் பரமன் முதல்வனாதல் பற்றி, “முக்கட் பொருளே” என்றும் மொழிகின்றார். பொய் முதலிய குற்றமுடையாரைத் திருத்தற் பொருட்டு அவை யில்லாதாரிடையே இருக்க வைப்பது முறையே யன்றி, அவற்றை யுடையாரிடத்து வைப்பது முறையாகாமையின், இப்பொழுது என்னை உன்னை நாளும் தொழுது வணங்கும் தொழும்பரிடையே வையாமல் அல்லாதவரிடத்து வைத்தது ஏன்? என இயம்புவாராய், “இன்னே எளியேன் பொய்யுடையேன் எனினும் அடியேன் அலவோ நான் என்னே நின்னைத் துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே” எனவும், இச் செயற்கண் உனது திருவுள்ளக் குறிப்பை அறிகிலேன் என்பாராய், “நின் புணர்ப்பை அறியேன்” எனவும், எனது புலைத்தன்மை அதனை உணராவாறு மறைக்கின்றது என்றற்குப் “புலையேனே” எனவும் புகல்கின்றார். புணர்ப்பு, ஈண்டு திருவுள்ளக் குறிப்பின்மேல் நின்றது.

     இதனால், திருவடியைத் தொழுதெழும் இயல்புடைய என்னைத் தொழாதார் கூட்டத்தில் இருக்கவைத்த திருக்குறிப்பு என்னையோ என விண்ணப்பித்தவாறாம்.

     (9)