6. காமவுட் பகைவனுற் கோபவெங் கொடியனும்
கனலோப முழு மூடனும்
கடுமோக வீணனும் கொடு மதமெனும் துட்ட
கண் கெட்ட ஆங்காரியும்
ஏமமறு மாச்சரிய விழலனும் கொலையென்
றியம்பு பாதகனுமாம் இவ்
வெழுவரும் இவர்க்குற்ற வுறவான பேர்களும்
எனைப்பற் றிடாம லருள்வாய்
சேமமிகு மாமறையி னோமெனும் மருட்பதத்
திறனருளி மலய முனிவன்
சிந்தனையின் வந்தனை யுவந்த மெய்ஞ்ஞானசிவ
தேசிக சிகாரத்னமே
தாமமொளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: பெரு நகரமாக விளங்கும் சென்னைக் கந்த கோட்டத்துள் இலங்கும் கோயிலில் எழுந்தருளும் கந்தசாமிக் கடவுளே, தண்ணிய ஒளி திகழும் தூய மணிகளிற் செம்மைச் சைவ மணியாகிய ஆறு முகம் கொண்ட தெய்வமாகிய மணியே, நலம் மிக்க பெரிய வேதங்களின் ஓம் என வழங்கும் அருள் மொழியின் பொருட் கூறுகளை மலய மலைமேல் தங்கும் அகத்திய முனிவர்க்கு அருளிச் செய்து அவன் சிந்தனைக்கண் வைத்துச் செய்த வழிபாட்டுக்கு உவந்தருளிய மெய்ஞ்ஞான சிவாசாரியர்கட்கு முடிமணியாகும் பெருமானே, காம மென்னும் உட்பகைவனும், கோப மென்னும் கொடியவனும், கனத்த லோபம் என்னும் முழுத்த மூடனும், மிக்க மோகம் எனப்படும் வீணனும், கொடிய மதம் எனப்படும் துட்டத்தனமும் குருட்டுத் தன்மையுமுடைய ஆங்கார வுருவினனும், காப்பற்ற மாற்சரிய மென்னும் விழலனும், கொலை எனப்படும் பாதகனுமாகிய எழுவரும் இவர்கட்கு உறவினரான பிறரும் என்னைச் சூழ்ந்து தம் கைப்பற்றிக் கொள்ளாதபடி அருள் செய்தல் வேண்டும். எ. று.
கருவிலே தோன்றிக் குழவிப் பருவத்தே முளைத்து இளமை வளர வளர்ந்து பிற வுடம்புகளைப் படைக்கும் காளைப் பருவத்தே முகிழ்த்து மலரும் இயல்பிற்றாதலின் காம விச்சை நன்மையினும் தீமை பெரிது செய்வது பற்றிக் “காம வுட் பகைவன்” என்று கூறுகிறார். பொறியறிவு சிறிது வளர்ந்தவுடன் தோன்றி முற்றவும் கெடாத தன்மைத் தாய கோபம், நலத்தினும் கேடு மிக விளைப்பது பற்றிக் “கோபவெங்கொடியன்” என்கின்றார். உடலை வெதுப்பி முகத்தைச் சிவப்பித்து வெவ்விய சொற்களை வெளிப்படுத்திக் கொடுமை செய்தலால் கோபத்தை “வெங் கொடியன்” என விளம்புகின்றார். திருவள்ளுவர், “சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி” (குறள்) என்பர். கன லோபம், நில்லாது செல்லும் செல்வத்தின்பால் உளதாகும் கடும் பற்று. செல்வப் பற்று அறிவை மறைத்து மேலே செய்வகை யெண்ணாதவாறு சிந்தையைத் திகைப்பித்தலின், “கனலோப முழு மூடன்” என்று மொழிகின்றார். சிந்தைக்கண் தெளிவு பிறவாதபடி மயக்கும் குற்றத் தன்மையைக் “கடுமோகம்” என்றும், மயக்கத்திற் செய்வன பயனின்றிக் கெடுவது பற்றிக், “கடு மோக வீணன்” என்றும் கூறுகின்றார். உடல் நலம், உடைமை நலங்களால் அறிவறை போகி நினைவு சொல் செயல்களில் நான் எனும் தன்முனைப்போடு உளதாகும் மனச் செருக்கு, “கொடுமதம் எனும் ஆங்காரி” எனப்படுகிறது. ஆங்காரம், நான் எனும் தன்முனைப்பு. ஆங்காரத்தை யுடையதாகலால், மதம் ஆங்காரி என உபசரிக்கப் படுகிறது. மதத்தால் துட்டச் செய்கைகளும், ஆங்காரத்தால் நலம் தீங்குகளை நல்லவர் காட்டினும் காணாத் தன்மையுமுண்டாதலால் “கொடு மதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி” என்று பழிக்கின்றார். மாற்சரியம் மாச்சரிய மென வந்தது; அது தமிழில் செற்றம் என வழங்கும். உடல் வலியும் மனவலியும் அறிவு வலியும் அழிந்த நிலையில் பகைமை யுணர்வைப் பன்னாள் நெஞ்சிற் கொள்ளும் குற்றத் தன்மை யாதலால் அதனை “ஏமம் அறும் மாற்சரியம்” என்றும், அதனை யுடையவன் ஆளாய்த் தோன்றுவதன்றி எதற்கும் எவர்க்கும் பயன் படானாதலால் “விழலன்” என்றும் எள்ளுகின்றார். விழல், பயனில்லது. “அழல தோம்பும் அருமறையோர் திறம் விழல தென்னும் அருகர்” (ஆலவாய்) என ஞானசம்பந்தர் இச்சொல்லை வழங்குவது காண்க. ஐம்பெரும் பாதங்களில் ஒன்றாதலின், “கொலை யென்று இயம்பு பாதகன்” என்கிறார். “கள்ளும் பொய்யும் காமமும் கொலையும், உள்ளக் களவு மென் றுரவோர் துறந்தவை” (மணி : 34 : 77-8) எனப் பிறரும் கூறுவர். காம முதலிய குற்ற மேழினையும் அவற்றை யுடையார் மேல் வைத்துத் தனித்தனியே கூறுதலால் “இவ்வெழுவரும்” எனவும், இவற்றோடு இயைபுடைய குற்றங்களை “இவர்க்குற்ற உறவான பேர்களும்” எனவும் இசைக்கின்றார். கொலை யொழிந்த ஆறனையும் முறையே காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என விரித்துப் “பகை வர்க்கம்” என்பது முண்டு. “கள், களவு, காமம், பொய்” என்பவற்றோடு “கொலை”யைச் சேர்த்து “மாபாதகம் ஐந்து” என்பாரும் உண்டு. குற்றவகையிற் சேர்ந்த காமம், மாபாதகத் துள்ளும் சேர்வது போல, கொலை ஈண்டுக் குற்ற வகையிற் கொள்ளப்பட்ட தென்க. ஓம் என்னும் பதம் வேதத்தின் முன்னே நிறுத்தி ஓதப்படுதலால், “மாமறையின் ஓம் என்னும் அருட்பதம்” என வுரைக்கின்றார். ஓங்காரம் சிவத்துக்குரிய தென்பது தோன்ற, “ஓங்காரன் காண்” (வீழி) என்றும், அதன் உட்பொருளே சிவன் என்றற்கு “ஓங்காரத் துட்பொருளை” (ஆனைக்கா) என்றும், சிவன் அதன் மெய்ப்பொருள் என்பாராய், “ஓங்கார மெய்ப் பொருளை” (ஆலம் பொழில்) என்றும் திருநாவுக்கரசர் கூறுகின்றார். தாம் உய்யும் பொருட்டு இறைவன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்றான் (சிவபு) எனவும், ஓங்காரத் துட்பொருளைத் தமக்கு அருளிச் செய்தான் (அச்சோ) எனவும் மாணிக்க வாசகரும் இசைக்கின்றார். இங்கே அகத்திய முனிவர்க்கு ஓங்காரப் பொருளை முருகப் பெருமான் அறிவுறுத்ததாகக் கூறுவாராய், “ஓம் எனும் அருட்பதத் திறன் அருளி மலய முனிவன் சிந்தனையின் வந்தனை யுவந்த மெய்ஞ்ஞான சிவதேசிக” என்று உரைக்கின்றார். மலய முனிவன், மலய மெனப்படும் பொதிகை மலையில் உறையும் முனிவனாகிய அகத்தியன். சிந்தனையாற் செய்த வழிபாட்டை, “சிந்தனையின் வந்தனை” என்று சிறப்பிக்கின்றார். ஓங்காரப் பொருள் மெய்ம்மைச் சிவஞானமாதலால், அதனை உபதேசித்தது பற்றி, “மெய்ஞ்ஞான சிவதேசிக” என்று மொழிகின்றார். சிகா ரத்னம், சிகாமணி. இதனையே சிரோன்மணி யென்றும் கூறுவர்.
இதனால், காமம் முதலிய எழுவகைக் குற்றங்களும் சேர விடாமல் தம்மைக் காத்தருள வேண்டியவாறாம். (6)
|