60. இருப்பாய மாய மனத்தால் வருந்தி
இளைத்து நின்றேன்
பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது
போதுமின்றே
கருப்பாழ் செயும் உன் கழலடிக்கே யிக்
கடையவனைத்
திருப்பா யெனிலென் செய்கேன் தணிகாசலத்
தெள்ளமுதே.
உரை: திருத்தணிகை மலையில் எழுந்தருளும் தெள்ளமுது போலும் முருகப் பெருமானே, இரும்பு போன்ற, மாயா காரிய மனத்தால் வருத்த முற்று இளைத்துள்ளேன்; மலை போற் கன்மங்கள் நிறைந்த மண்ணகப் புது வாழ்வில் புதைந்திருந்தது போதுவதாம்; இப்பொழுது பிறவியாகிய காட்டை யழிக்கும் உன்னுடைய திருவடிப் பக்கல் கடையவனாகிய என்னைத் திருப்பிச் செலுத்தாவிடில் யான் என்ன செய்ய முடியும், எ. று.
சிந்தித்த வழித் தேனூறி அண்ணிக்கும் பெருமானாதலின் “தெள்ளமுதே” என்று சிறப்பிக்கின்றார். பிரகிருதி மாயா காரியமாகிய ஆன்ம தத்துவத்துள் ஒன்றாதலின் “மாயமனம்” என்றும், எளிதில் உருகாத இயல்புடைமை பற்றி, “இருப்பாயமனம்” என்றும் உரைக்கின்றார். அறிவு செயல்கட்குரிய இந்திரியங்களைத் தன்வயம் நிறுத்திப் பன்னெறியிற் செலுத்தி அலைத்தலால், “மாய மனத்தால் வருந்தி இளைத்து நின்றேன்” என வுரைக்கின்றார். பிறக்குந் தோறும் வாழ்வு புதிதாய் இயலுவது பற்றிப் “புதுவாழ்வு” என்றும், மன முதலிய கரணங்களால் கணந்தோறும் வினைகள் பெருகி மலைபோற் குவிவது உணர்ந்து, “பொருப்பாய கன்மப் புது வாழ்வு” என்றும், முற்றவும் நுகர்ந்து கழிக்கும் திறமின்றி முன்னும் பின்னும் அக்கன்மங்களாற் சூழப்பட்டுப் புதைந்து வருந்தும் திறம் விளங்க “ஆழ்ந்தது போதும்” என்றும் அவலித் துரைக்கின்றார். கன்மச் சூழலினின்றும் நீங்கி உய்தி பெறுதற்கு வாயில் நின் திருவடி நீழலல்லது இல்லை; அதனைப் பெறற் கமைந்த நன்னெறியில் என்னைச் செலுத்தியருளுக என்பார், “உன் கழலடிக்கே இக்கடையவனைத் திருப்பாய்” எனவும், இன்றேல் யான் செயலறவு பட்டுக் கெடுவேன் என்பார், “திருப்பாயெனில் என்செய்கேன்” எனவும் முறையிடுகின்றார். பொருப்பு - மலை. கரு, ஈண்டுப் பிறவி மேற்று. “பிறப்பார் பிறப்புச் செறப்பாதியந்தம் செலச் செய்யும் தேசன்” (பறியலூர்) எனப் பெரியோர் உரைப்பது காண்க.
இதனால் கன்ம வாழ்வில் ஆழ்ந்து கிடக்கும் தன் மனத்தைத் திருவடி சேர்ந்தொழுகும் வாழ்வில் திருப்ப வேண்டியவாறாம். (60)
|