600.

     வஞ்ச மடவார் மயலொருபால்
          மணியே நின்னை வழுத்தாத
     நஞ்சம் அனையார் சார்பொருபால்
          நலியும் வாழ்க்கைத் துயர்ஒருபால்
     விஞ்சும் நினது திருவருளை
          மேவா துழலும் மிடிஒருபால்
     எஞ்சல் இலவாய் அலைக்கின்ற
          தென்செய் கேன்இவ் எளியேனே.

உரை:

     மணியே, வஞ்ச நினைவுகளையுடைய இளமகளிரால் விளையும் மயக்கம் ஒருபாலும், நின்னை வழிபடுவ தில்லாத விடம் போன்றவர் தொடர்பு ஒரு பக்கமும், வருந்துகிற வாழ்க்கைத் துன்பம் ஒருபாலும், எல்லாவற்றிற்கும் மேலாய்ச் சிறக்கும் உனது திருவருளைப் பொருந்தாவாறு மனத்தை விலக்கும் வறுமை ஒருபாலும், குறைவற நெருங்கி வருத்துகின்றனவாதலால் எளியனாகிய யான் என்ன செய்வேன்? எ.று.

     மாணிக்கமணி போல் ஒளிரும் திருமேனி யுடையனாதலால் “மணியே” எனச் சிறப்பிக்கின்றார். மடவார் என்றலின் காம வேட்கையை எழுப்பி, நினைவு, சொல், செயல்களால் மயக்கம் விளைவிக்கும் இளமகளிர் என்று கொள்க. இறைவன் திருவடியை வணங்கி வழிபட நினையாத நெஞ்சம் தீயன நினைந்து செய்தற் கஞ்சாமல் தீது விளைவிக்கும் தன்மை யுடையதாகலின் வழிபடாதவர்களை “நின்னை வழுத்தாத நஞ்சம் அனையார்” என்று நவில்கின்றார். நஞ்சம் - விடம். சார்பு - தொடர்பு. வாழ்க்கைக்கு வேண்டுவன அனைத்தும் சேரக் குறைவறக் கிடைத்த லருமையால் துன்பம் இடையறாது நிலவுவதுபற்றி “நலியும் வாழ்க்கைத் துயர்” என்றும், இக் கூறியவற்றிற்கெல்லாம் மேலாய் ஒன்றையும் நினையவிடாது தடுப்பது வறுமையாதலால் அதனை, “விஞ்சும் நினது திருவருள் மேவா துழலும் மிடி” என்றும் விளம்புகின்றார். மடவார் இன்பத்திலும் வாழ்க்கை யின்பத்திலும் மேலாயது திருவருள் இன்பம் என்றற்கு, “விஞ்சும் நினது திருவருள்” என விசேடிக்கின்றார். இவற்றால் துன்பம் இடையறவின்றி ஈண்டுதலால், “எஞ்சல் இலவாய் அலைக்கின்றது” என வருந்துகிறார். எஞ்சுதல் - குறைதல். அலைக்கின்றது என்னும் வினையை எல்லாவற்றோடும் கூட்டுக. துன்ப நினைவால் வள்ளலாரின் திருவுள்ளம் கலக்கமுறுவது விளங்க “என் செய்கேன்” என்று கையறவு பட்டு விண்ணப்பிக்கின்றார்.

     இதனால், இறைவன் திருவருளை நினையாவாறு தடுத்து வருத்தும் துன்பங்களைத் தொகுத் தோதியவாறாம்.

     (10)