602. எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி
ஏத்துகின்றார் நின்பதத்தை ஏழை யேன்நான்
வெப்பாய மடவியர்தம் கலவி வேட்டு
விழுகின்றேன் கண்கெட்ட விலங்கே போல
இப்பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும்
எண்ணுகிலேன் முக்கணுடை இறைவா என்றன்
அப்பாஎன் ஆருயிர்க்கோர் துணைவா வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
உரை: மூன்றாகிய கண்களையுடைய இறைவனே, எனக்கப்பனே, எனது அரிய உயிர்க்கு ஒப்பற்ற துணைவனே, எப்பக்கம் நோக்கினும் நின்னுடைய மெய்யன்பர் எல்லாரும் சேர்ந்து நின் திருவடிகளைப் போற்றுகின்றார்கள்; ஏழையாகிய நானோ வெம்மையையுடைய இளமகளிரது கூட்டத்தை விரும்பி அவரிடையே வீழ்ந்து கிடக்கின்றேன்; கண்ணிழந்த மாடுபோல மண்ணுலகில் மயக்கமுற்று நல்லதொன்றும் சிந்திக்காமல் வீணாக அலைந்து வருந்துகிறேன். ஐயோ, நான் என்ன செய்வேன்! எ.று.
உணர்வு வடிவாய் பெறற்கரும் பொருளாதலின் உயிரை ‘ஆருயிர்’ எனவும், உயிர்க்குயிராய் நின்று துணை செய்பவன் இறைவனல்லது பிறர் இல்லையாதலின் “உயிர்க்கோர் துணைவா” எனவும் உரைக்கின்றார். பார்க்குமிடந்தோறும் மெய்யன்பர்கள் கூடிச் சிவபெருமான் திருவடியைப் புகழ்ந்து பாராட்டுவதைக் காண்கின்றாராதலின் “எப்பாலும் நின் அன்பர் எல்லாம் கூடி நின் பதத்தை ஏத்துகின்றார்” என்றும், தன்னை நோக்கிய காலத்தில் தான் மகளிர் கூட்டத்தில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு வருத்தம் மேலிட்டு ஏழையேன் நான் “வெப்பாய மடவியர்தம் கலவி வேட்டு விழுகின்றேன்” என்றும் கூறுகின்றார். இளமகளிரின் உடற்குருதி வெப்ப மிக்கிருத்தலின் “வெப்பாய மடவியர்” எனக் குறிக்கின்றார். இயல்பிலே உண்மையறிவில்லாத விலங்கு கண்ணிழந்த வழி அறிவு மயங்கி அலமருவதுபோல நிலவுலகில் நல்லறிவிழந்து காம இச்சையால் மயங்கியிருக்கும் தமது தன்மையை எடுத்தோதுவாராய், “கண் கெட்ட விலங்கே போல இப்பாரில் மயங்குகின்றேன்” எனவும், இந்நிலையில் தமது மனத்தை ஆராய்ந்து அதன்கண் நன்னினைவு ஒன்று மில்லாமை கண்டு “நன்மை யொன்றும் எண்ணுகிலேன்” எனவும், இதனால் ஒரு பயனுமின்றி அலைந்து செய்வதறியாமல் வருந்துகிறேன் என்றற்கு “அலைகின்றேன் என்செய்கேன்” எனவும் துயரப்படுகின்றார். விலங்கெனப் பொதுப்படக் கூறினாராயினும் பயிற்சிச் சிறப்பால் மாடு என்பது கொள்ளப்பட்டது.
இதனால், மகளிர் வேட்கையால் மதி மயங்கி அலைகின்றமை கூறியவாறு. (2)
|