603. இன்புடையார் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
இசைக்கின்றார் நான்ஒருவன் ஏழை இங்கே
வன்புடையார் தமைக்கூடி அவமே நச்சு
மாமரம்போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத்
துன்புடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன்
தூய்மைஎன்ப தறிந்திலேன் சூழ்ந்தோர்க் கெல்லாம்
அன்புடையாய் எனைஉடையாய் விடையாய் வீணே
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
உரை: நின்பால் அன்புடையராய் நின்னையே நினைக்கும் பெரு மக்கள் பலரும் மனத்தில் இன்பம் நிறைந்தவராய் நினது திருப்புகழைப் பாடி மகிழ்கின்றார்கள். ஏழையாகிய நான் ஒருவன் மாத்திரம் வன்கண்மை யுடையவரோடு கூடி வீணாக நிற்கும் பெரிய நச்சுமரம் போல் இருக்கின்றதோடு வஞ்சனைமிக்க வாழ்க்கையால் துன்பமடைநதவரனைவர்க்கும் தலைவனாய், தூய்மை என்பது சிறிதுமின்றி வீணே அலைந்து வருந்துகிறேன். ஐயோ நான் என்ன செய்வேன்! எ.று.
அன்பால் நினைப்பவர் உள்ளத்தில் ஒளியும், கேடுபடா நலமும், அவருடைய கிளைஞர்க்கு வளமும் உண்டாதலின், “நின் அன்பர் எல்லாம் இன்புடையார்” என்றும், அதனால் அவர்கள் நின் புகழை நாடி மகிழ்கின்றார் என்றும் உரைப்பாராய், “எல்லாம் நின்சீர் இசைக்கின்றார்” என்று புகல்கின்றார். ஞானசம்பந்தரும் “நம் கிளைகிளைக்கும் கேடு படாத் திறமருளிக் கோளாய நீக்குமவன் கோளிலி யெம்பெருமானே” என்று கூறுவது காண்க. ஒருகால் நினைக்கின் பலகாலும் தோன்றி நலஞ் செய்பவனாகலின் “சூழ்ந்தோர்க் கெல்லாம் அன்புடையாய்” எனவும், அதனால் என் உடல், பொருள், உயிர் மூன்றையும் தனக்கு உடைமையாகக் கொள்வது பற்றி “எனையுடையாய்” எனவும் இயம்புகின்றார். சூழ்தல் - நினைதல். ஏழை - அறி்வில்லாதவன். நின்பால் அன்புடையவனாதலால் வரும் நலங்களை யறியாமையால் வன்கண்மை யுடைய பிற மக்களோடு கூடி உள்ளீடாகிய கரணங்களனைத்தும் நஞ்சாகி வீணனாகினேன் என்பது புலப்பட, “ஏழை யிங்கே வன்புடையார் தமைக் கூடி அவமே நச்சு மா மரம்போல் நிற்கின்றேன்” எனக் கூறுகின்றார். மக்களுருவில் தோன்றி நிற்றலால், “போல் நிற்கின்றேன்” எனப் புகல்கின்றார். நச்சு மாமரம் என்பதற்கு, நஞ்சுற்ற மாமரம் எனினும் அமையும். நினைவும் சொல்லும் செயலும் எல்லாம் வஞ்சம் கலந்தமையின் வாழ்வில் துன்புற்று வருந்துவோர் எல்லாரினும் துன்ப மிகுதியால் தலைவனாக இருக்கின்றேன் என்பாராய் “வஞ்ச வாழ்க்கைத் துன்புடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன்” என்றும், அதனால் தூய்மைக்கே என்பால் இடமில்லா தொழிந்தமையின் தூய்மை என்பதறிந்திலேன், இவ்வாற்றல் என்னை ஏற்று அன்பு செய்வார் ஒருவரும் இல்லாமை பற்றி வீணே திரிவேனாயினேன் என விளம்புவாராய் “வீணே அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ” என்றும் மொழிகின்றார். தலைமை, வஞ்சமிகுதி பற்றி வந்தது.
இதனால், தூய்மையின்மையால் வீணே அலைகின்றமை தெரிவித்தவாறு. (3)
|