604.

     விஞ்சுடையாய் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
          மெய்ப்புளகம் எழத்துதித்து விளங்கு கின்றார்
     நஞ்சுடையார் வஞ்சகர்தம் சார்பில் இங்கே
          நான்ஒருவன் பெரும்பாவி நண்ணிமூட
     நெஞ்சுடையார் தமக்கெல்லாம் தலைமை பூண்டு
          நிற்கின்றேன் கருணைமுக நிமலக் கஞ்சம்
     அஞ்சுடையாய் ஆறுடைய சடையாய் வீணில்
          அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

உரை:

     அருளொழுகும் முகமாகிய தூய கமலங்கள் ஐந்துடையவனே, கங்கையாறு தங்குகிற சடையை யுடையவனே, மேம்பட்ட ஆற்றலுடையவனே, நினக்கு அன்பராயினார் எல்லாரும் நினது புகழைத் தமது உடம்பு பூரிக்குமாறு போற்றி இன்ப விளக்கமெய்து கின்றார்களாக, நெஞ்சில் நஞ்சு போன்ற வஞ்சனை யுடையவர் கூட்டத்தில், இவ்வுலகில், நான் ஒருவன் மாத்திரம் பெரும் பாவியாய்ச் சேர்ந்திருந்து மூடத்தன்மை பொருந்திய மனமுடைய அக் கீழ்மக்களின் கீழ்மைக்கெல்லாம் தலைவனாய் வீணாக அலைந்து வருந்துகிறேன். ஐயோ நான் என்ன செய்வேன்! எ.று.

     அருள் நிறைந்தொழுகும் முகம் ஐந்துடையவன் என்பதுபற்றிச் சிவபெருமானை, “கருணை முக நிமலக் கஞ்சம் அஞ்சுடையாய்” என்று சொல்கிறார். “திகழ்தசக்கரச் செம்முகம் ஐந்துளான்” என்று கந்த புராணம் கூறுவது காண்க. வரம்பிலாற்றலுடைமை இறைவனுடைய எண்குணத்துள் ஒன்றாதலின், “விஞ்சுடையாய்” என்கின்றார். இறைவன் திருப்பெயர்களைச் சிந்திக்குந்தோறும், ஓதுந்தோறும் இன்பம் பெருகிச் சுரத்தலின், “நின் அன்பர் எல்லாம் நின்சீர் மெய்ப்புளகம் எழத்துதித்து விளங்குகின்றார்” என்று விளம்புகிறார். “நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்புள் நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையான்” என (கோத்) மணிவாசகப்பெருமான் கூறுதல் காண்க. உள்ளத்தே பெருகும் இன்பத்தால் மெய்யிடத்தே தோன்றும் பூரிப்பு உள்ளூறும் அன்பொளியைப் புறத்தே விளங்கச் செய்தலின், “மெய்ப்புளகம் எழத்துதித்து விளங்குகின்றார்” எனக் கூறுகின்றார். வஞ்ச நினைவுகளை யுடையவர் நஞ்சுண்டார் போன்று ஒளி தேய்ந்து ஒடுங்குவது பற்றி நஞ்சுடையாராகிய வஞ்சகர் என்கின்றார். அவர் கூட்டத்தில் தோய்ந்தமையின் வஞ்சச் செயல்களால் நானும் பெரும் பாவியாயினேன் என்பாராய், “வஞ்சகர் சார்பில் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி” என்று கூறுகிறார். மூடம் - அறியாமை. மனத்தின்கண் படிந்து இயல்பில் எழுகின்ற அறிவொளியை மூடி மறைத்தலால் அறியாமை இருளை ‘மூடம்’ என்கிறார். “மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார்” (சிலம்பு) என இளங்கோவடிகள் சுட்டிக்காட்டுதல் காண்க. மடம் - நெஞ்சின்கண் தங்குவது. அது மெய்ப்படுமிடத்து மூடமாகும். மடமையால் மூடப்பட்ட அறிவொளி குன்றிய மாக்களில், நான் மிகுதியால் தலைமை யுறுகின்றேன் என்பது தோன்ற “மூட நெஞ்சுடையார் தமக்கெல்லாம் தலைமை பூண்டு நிற்கின்றேன்” என்றும், இவற்றால் நிலையுறாது கலங்கித் திரிகின்றேன் என்பார் “அலைகின்றேன்” என்றும், நினது அருளொளியாலன்றி மடமை யிருள் நீங்காதாகலின் வேறொன்றும் செய்தற்கில்லை யென்பார், “என் செய்கேன் அந்தோ அந்தோ” என்றும் இரங்குகின்றார்.

     இதனால், மூட நெஞ்சினர்களோடு கூடி அறிவு திரிந்து அலைந்தமை கூறியவாறாம்.

     (4)